கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் விவகார வழக்கு ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி நியமன சர்ச்சை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு புதன்கிழமை (17) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேலதிக விசாரணை மேற்படி தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.ஏ.நிசாம் கடமையாற்றி வந்த நிலையில் 2018-10-01ஆம் திகதி அப்போதைய மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவினால் எம்.கே.எம்.மன்சூர் மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதையடுத்து 2019-02-01ஆம் திகதியன்று மீண்டும் எம்.ரி.ஏ.நிசாம் மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதனை ஆட்சேபித்து பதவி விலக்கப்பட்ட மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2019-03-05ஆம் திகதி இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது எம்.ரி.ஏ.நிசாமின் நியமனத்திற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்த நீதிமன்றம், எம்.கே.எம்.மன்சூரை மீண்டும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை தொடர்வதற்கு அனுமதியளித்ததுடன் 2019-06-01ஆம் திகதியன்று மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மன்சூர் நிரந்தரமாக மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவி வகிக்க முடியும் என்ற உத்தரவை வழங்கியிருந்தது.

இதையடுத்தே பதவி நீக்கம் செய்யப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அத்தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எம்.கே.எம்.மன்சூர் மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம், எம்.ரி.ஏ.நிசாமை மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்ற அனுமதி வழங்கியிருந்ததுடன் வழக்கு முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவித்திருந்தது.

இவ்வழக்கு எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றுகின்ற எம்.ரி.ஏ.நிசாமின் சேவைக்காலம் எதிர்வரும் ஜுலை 14ஆம் திகதியுடன் பூர்த்தியாகி, ஓய்வுபெறவுள்ள அதேவேளை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, மாகாண கல்வி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றும் எம்.கே.எம்.மன்சூரின் சேவைக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 23ஆம் திகதியுடன் நிறைவுற்று, ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.