புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டல்.

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் சுகாதார வழிகாட்டல்களில் மீண்டும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நாட்டில் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், மக்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 363 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.