இலங்கையின் சொத்தான கச்சதீவை இந்தியாவுக்குத் தாரைவார்க்கோம்! ராஜபக்ச அரசு திட்டவட்டம்.

“யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. கச்சதீவு ஒப்பந்தத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்தத் தீவை இந்தியாவுக்குத் தாரைவார்க்கமாட்டோம்.”

இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்தியாவின் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப்பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றோம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அன்று இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த கச்சதீவை, இந்திய மத்திய அரசு, ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு முழுமையாக வழங்கிவிட்டது.

இந்தநிலையில், இன்று இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை உரிமை கோருவதை நினைக்கும்போது வேடிக்கையாகவுள்ளது.

ஒப்பந்தத்தின்படி கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இரு நாட்டு மக்களும் ஒவ்வொரு வருடமும் கலந்துகொள்வார்கள். தமிழக மீனவர்களும் இந்தத் தீவில் தங்கித் திரும்புவார்கள்.

அதற்காக இலங்கையின் சொத்தான கச்சதீவை இந்தியாவுக்கு நாம் தாரைவார்க்கமாட்டோம். தமிழக மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கமாட்டோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.