வடக்கு, கிழக்கு அதிபர், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம்! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை.

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற பெருமளவான அதிபர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு அதனால் தீராத நோய்கள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கின்றன.”

இவ்வாறு சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.

சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

01. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம், ஆசிரிய நியமனம் என்பவற்றில் பல்வேறு குழறுபடிகள் நடைபெறுகின்றன.

பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப அதிபர்கள் நியமிக்கப்படுவதுமில்லை. வெற்றிடங்களை நிரப்புவதும் இல்லை. அதிபர் சேவை தரம் 1இல் உள்ளவர் தரம் III பாடசாலையிலும், அதிபர் சேவைத்தரம் 3இல் உள்ளவர் 1ஏபி பாடசாலையிலும் கடமையாற்றுகின்றார். பெருமளவான கஸ்ட, அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளில் அதிபர் சேவையில் உள்ளவர்கள் கடமையில் இல்லை. மாறாக சேவைக் கொடுப்பனவுகள் ஏதுமின்றி ஆசிரியர்களே அதிபர் கடமையில் உள்ளனர்.

ஆசிரிய நியமனங்கள் எவையும் நியாயமாக நடைபெறுவதில்லை. ஒருசில இடங்களில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் அவசியமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. வடக்கு மாகாணத்தில் அனைத்து வலயங்களிலும் ஆசிரியர்கள் மேலதிகம். மாறாக ஆசிரிய ஆளணிக்குப் பொருத்தமில்லாமலும் சீர்செய்யப்படாமலும் உள்ளனர்.

02. ஆசிரிய இடமாற்றங்கள் ஏனைய மாகாணங்களைவிட வடக்கு, கிழக்கில் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பப்படியே நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் வலயங்களுக்கு இடையிலான ஆசிரிய இடமாற்றம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் பதவி மோகத்தால் பல ஆண்டுகள் நடைபெறவில்லை.

03. வடக்கு மாகாணத்தில் அரச சுற்று நிருபத்துக்கு 2007/20) மாறாக மேன்முறையீடுகள் எதனையும் ஏற்காமல் தாம் சொல்லும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு. ஒரு பாடசாலையில் ஒரு பாடத்துக்கு ஒரேயொரு ஆசிரியர் இருந்தால் அவருக்கும் இடமாற்றம். அவர் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் ஆசிரியர்கள் மேலதிகம். பின்னர் நேரசூசிகை இல்லாதவர்களின் வேதனம் நிறுத்துவதாக அச்சுறுத்தல். இதற்கு கணக்காய்வுத் திணைக்களம் சாட்டு.

04. ஏழு ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நேரசூசிகை வழங்கக்கூடாது என கல்விப்பணிப்பாளர் கட்டளை. அவர்கள் இன்னுமொரு பாடசாலைக்கு மேலதிக ஆளணியாக அதிரடி இடமாற்றம். கடிதம் வரும். மேன்முறையீடு செய்யாமல் கடமையேற்கவேண்டும் என்ற கட்டளை.

இவை போன்ற ஏராளமான விடயங்களால் அதிபர்களும், ஆசிரியர்களும் மன அழுத்தங்களுக்கு உட்பட்டு சேவையில் இருந்து இடைவிலகுவதும், முன்னரே ஓய்வுபெறுவதும், நோய்வாய்ப்படுவதும், மரணிப்பதும் வடக்கு, கிழக்கில் சாதாணமாகிவிட்டது.

தற்போதைய நிலையில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்னிலையில் இருப்பதற்கு இதுவே மூல காரணம்.

ஆசிரிய தொழில் பிற தொழில்கள் போன்றதல்ல. மனமகிழ்ச்சியுடன் செய்யவேண்டிய தொழில்.

அதிகாரங்களைப் பயன்படுத்தி கருமமாற்றுவது இந்தத் தொழிலுக்குப் பொருந்தாது – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.