உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் சரக்கு குறித்த பல வியக்க வைக்கும் தகவல்கள்.

மணல் புயலால் சூயஸ் கால்வாயில் சென்ற உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

கால்வாயின் குறுக்கே கப்பல் நிற்பதால் பிற கப்பல்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில், இந்த கப்பல் குறித்த பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூயஸ் கால்வாயில் சிக்கி நிற்கும் எம்வி எவர்கிவன் என்ற பெயர் கொண்ட கப்பல் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல் மாடலாக குறிப்பிடப்படுகிறது. இந்த கப்பல் 2,20 லட்சம் டன் எடை கொண்டது. இந்த கப்பல் 399.94 மீட்டர் (1,312 அடி) நீளமும், 58.8 மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது, மூன்று கால்பந்தாட்ட மைதானங்களுக்கு இணையான நீள, அகலத்தை கொண்டது. பல அடுக்குமாடி கட்டங்களுக்கு இணையான உயரத்துடன் பிரம்மாண்டத்தில் மிரட்டுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இயக்க ஆரம்பிக்கப்பட்டது. ஜப்பானை சேர்ந்த இமபாரி ஷிப் பில்டிங் நிறுவனம்தான் இந்த கப்பலை கட்டியது. ஜப்பானை சேர்ந்த ஷோயி கிசென் கைசா என்பவருக்கு சொந்தமான இந்த கப்பலின் போக்குவரத்து வர்த்தகத்தை தைவானை சேர்ந்த எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கவனித்து வருகிறது. பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் சிங்கிள் லோ ஸ்பீடு 2 ஸ்ட்ரோக் டீசல் எஞ்சின் புரொப்பலருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. 11 சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சினை மிட்சுய் மேன் பி அண்ட் டபிள்யூ தயாரித்து கொடுத்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79,500 எச்பி பவரை வெளிப்படுத்தும். ஒரே எஞ்சினில்தான் இந்த கப்பலின் பெரும்பாலான இயக்கம் நடக்கிறது.

அதிகபட்சமாக மணிக்கு 42.2 கிமீ வேகம் வரை கப்பல் செல்வதற்கான வல்லமையை கொடுக்கும். இந்த கப்பலில் 8 சிலிண்டர்கள் கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. துறைமுகத்தில் கப்பல் திரும்புவதற்கான உந்து விசையை வழங்குவதற்காக 3,400 எச்பி பவரை வழங்கும் இரண்டு த்ரஸ்ட்டர் வகை எஞ்சின்களும் உள்ளன.

இந்த பிரம்மாண்ட கப்பலில் ஒரே நேரத்தில் 20,124 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும். சீனாவிலிருந்து நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர்டாம் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்தை சந்தித்துள்ளது எம்வி எவர்கிவன் கப்பல்.

கால்வாயின் இருகரைகளையும் தொட்டு தரை தட்டி நிற்கும் இந்த கப்பலின் மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்கள் உள்ளன. மணல் புயலால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து திசை மாறி இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இதனால், மணிக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், பல கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மணல் புயலால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து தரை தட்டியதாக கூறப்படுகிறது.

பொதுவாக, சூயஸ் கால்வாயில் செல்லும் கப்பல்களின் மாலுமிகளுக்கு வழிகாட்டுவதற்காக சூயஸ் கால்வாய் நிர்வாகத்தின் வழிகாட்டு நிபுணர்கள் செல்வது வழக்கம். இந்த கப்பலிலும் இரண்டு பேர் இருந்தாக சொல்லப்படுகிறது. ஆனால், மணல் புயலால் கப்பலின் கேப்டன் திசையை மாற்றி இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், கப்பல் கரையை தட்டியுள்ள இடத்தில் மணலை அப்புறப்படுத்தி, கப்பலை மிதக்கவிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்போது கப்பலின் நிலைத்தன்மை குலைந்துவிடக்கூடாது என்பதற்காக பக்கத்தில் இழுவை கப்பல்கள் நிறுத்தப்பட்டு, கப்பல் நகராமல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இழுவை கப்பல்கள் கொண்டு இழுக்கும் முயற்சிகளில் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

கப்பலில் இருந்து கன்டெய்னர்களையும், எரிபொருளையும் அப்புறப்படுத்தி எடையை குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நிபுணர் குழுக்களுடன் கப்பல் நிறுவனமும், சூயஸ் கால்வாய் நிறுவனமும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கப்பலில் எந்த ஒரு தொழில்நுட்ப பிரச்னையும் இல்லை என்பதால், கப்பலை சேதாரமின்றி, மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஹம்பர்க் துறைமுகம் அருகே சூறாவளிக் காற்று காரணமாக, இதே கப்பல் 25 மீட்டர் நீளமுடைய பார்ஜர் கப்பலுடன் மோதி விபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், எல்பே ஆற்றில் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த கப்பலை மீண்டும் விரைவாக மிதக்க விடுவதற்கு கப்பல் நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் பிற கப்பல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை எம்வி எவர்கிவன் கப்பல் நிறுவனமும், காப்பீட்டு நிறுவனமும் வழங்க வேண்டி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உல்லாச கப்பல்கள் குறித்து அறிந்திராத பல சுவாரஸ்யங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மிதக்கும் நகரங்களாக அறியப்படும் உல்லாசக் கப்பல்கள் பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விஷயங்களில் ஒன்று. சிறு நகரத்தை போன்றே கட்டப்படும் இன்றைய உல்லாச கப்பல்களில் நவீன தொழில்நுட்பத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. அவ்வாறான உல்லாச கப்பல்கள் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

01. உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் என்ற பெருமையை ஹார்மோனி ஆஃப் தி சீஸ் பெற்றிருக்கிறது. இந்த கப்பல் 2,26,963 டன் நிகர எடை கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரிபீயன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டது.

02. இந்த கப்பல் கடந்த ஆண்டு சேவைக்கு அறிமுகமானது. இக்கப்பலில் 2,747 அறைகள் உள்ளன. 5,749 பயணிகள் செல்லலாம். தவிர, பணியாளர்கள் தனிக்கணக்கு. சொகுசு அறைகள், நீர் சாகச விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரை அரங்கம், உடற்பயிற்சி அரங்கம், ரெஸ்ட்டாரண்ட்டுகள், பார் உள்ளிட்ட வசதிகள் இந்த கப்பலில் உள்ளன.

03. ஆலூர் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலைவிட ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பல் 11.811 அங்குலம் மட்டுமே கூடுதல் நீளமுடையது. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல்கள் 16 தளங்களை கொண்ட கட்டங்களுக்கு இணையான உயரத்தை கொண்டது.

04. பெரும்பாலான உல்லாச கப்பல்களில் 13வது எண் துரதிருஷ்டவசமாக கருதப்படுவதால், 12வது தளத்திற்கு அடுத்து 14 என்ற எண்ணுடன் தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். 13வது எண் போலவே, எம்எஸ்சி நிறுவனமானது தனது மிகப்பெரிய உல்லாச கப்பல்களில் 17வது எண் கொண்ட தளத்தை தவிர்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

06. கரீபியன் தீவுகள் மற்றும் பஹாமாஸ் ஆகிய இடங்கள்தான் உல்லாச பயணிகள் முகாமிடும் முக்கிய இடங்களாக இருக்கின்றன. இந்த இடங்களை மையப்படுத்தியே உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் பயணங்கள் திட்டமிடப்படுகின்றன. மியாமி துறைமுகம் மிகவும் பரபரப்பான துறைமுகமாக இருக்கிறது.

07. உல்லாச கப்பல்களில் உணவுப் பொருட்களின் அளவு மலைக்க வைப்பதாக இருக்கிறது. உதாரணத்திற்கு கார்னிவல் நிறுவனத்தின் கன்ஸ்டெல்லேஷன் கப்பலில் 1,950 பயணிகளும், 999 பணியாளர்களும் செல்கின்றனர். இந்த கப்பலில் சராசரியாக வாரத்திற்கு 10,993 கிலோ மாட்டு இறைச்சி, 3,273 கிலோ பன்றி இறைச்சி, 4,632 கிலோ கோழி இறைச்சி,160 கிலோ நண்டு, 6,283 கிலோ மீன் பயன்படுத்தப்படுகிறது.

08. இதுதவிர, 11,674 கிலோ காய்கறிகள், 760 கிலோ சாஸ், 9,073 கிலோ பழங்கள், 12,300 லிட்டர் பால், 2,300 லிட்டர் ஐஸ்க்ரீம், 9,235 டஜன் முட்டைகள், 2,610 கிலோ சர்க்கரை, 1,700 கிலோ அரிசி போன்றவை பயன்படுத்தப்படுகிறதாம். 1,135 கிலோ காஃபி, 2,450 டீத்தூள் பைகளும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

09. மறந்தமாதிரி போய்டாதீங்க என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்த கப்பலில் 7 நாட்களில் மட்டும், 3,400 ஒயின் பாட்டில்கள், 200 ஜின் பாட்டில்கள், 290 வோட்கா பாட்டில்கள், 150 ரம் பாட்டில்கள், 350 விஸ்கி பாட்டில்கள், 10,100 பீர் கேன்கள்… என கேட்டதுமே போதை ஏறும் அளவுக்கு இருக்கிறது பட்டியல். மற்றொரு நினைவூட்டுகிறோம், இது ஒரு கப்பலுக்கான பட்டியல்.

10. உல்லாச கப்பல்களில் ஏற வரும் பயணிகள் மலர்களை எடுத்து வருவதில்லை. அது அபசகுனமாகவும், துரதிருஷ்டத்தையும், மரணத்தையும் அளிக்கும் என்ற நம்பிக்கை பயணிகள் மத்தியில் இருக்கிறதாம்.

11. சில உல்லாச கப்பல்களில் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் இவர்களுக்கு கப்பலின் அடித்தளங்களில் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால், கடலில் தண்ணீர் மட்டத்திற்கு கீழ் பகுதியில்தான் இவர்கள் உறங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

12. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் உள்ளிட்ட உல்லாச கப்பல்களுடன் ஒப்பிடும்போது டைட்டானிக் கப்பலின் அளவு பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த காலத்தின் பிரம்மாண்ட கப்பலாக டைட்டானிக் இருந்தது.

13. டைட்டானிக் கப்பலின் உருவ ஒற்றுமைகளுடன் புதிய டைட்டானிக் கப்பலை ஆஸ்திரேலிய பில்லியனர் ஒருவர் உருவாக்கி வருகிறார். டைட்டானிக் 2 என்ற பெயரில் அந்த கப்பல் குறிப்பிடப்படுகிறது.

14. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் மற்றும் ஃபிபா கால்பந்து போட்டிகள் நடைபெறும் நேரங்களில், போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலுள்ள துறைமுகங்களில் உல்லாச கப்பல்கள் நிறுத்தப்பட்டு நட்சத்திர விடுதிகள் போன்று பயன்படுத்தப்படுகின்றன.

15. பெரும்பாலான உல்லாச கப்பல்கள் நீர் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் இருக்கின்றனவோ, அதே அளவு உயரம் நீர் மட்டத்திற்கு கீழும் இருக்கும். உல்லாச கப்பல்களின் நங்கூரம் ஒவ்வொன்றும் 15 டன் எடை கொண்டதாக இருக்கும்.

16. ஒவ்வொரு உல்லாச கப்பலும் சராசரியாக ஆண்டுக்கு 73,000 நாட்டிக்கல் மைல் தூரம் பயணிக்கின்றன. 20 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்கின்றன. உலக அளவிலான சுற்றுலா செல்வதற்கு சராசரியாக 100 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. உல்லாசக் கப்பல்களில் சராசரியாக ஒரு சுற்றுலா என்பது 7 நாட்கள் கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

17. உலகிலேயே அதிக பயணிகளை கையாளும் விகிதத்தில் 21.3 சதவீதத்துடன் கார்னிவல் க்ரூஸ் நிறுவனமும், 16.67 சதவீதத்துடன் ராயல் கரிபீயன் நிறுவனம் பங்களிப்பு பெற்றிருக்கின்றன.

18. உல்லாச கப்பல்களில் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. தேன் நிலவு கொண்டாடுவதற்கான வசதிகளும் இருக்கிறது. எனவே, பணக்கார இளைஞர்கள் உல்லாச கப்பல்களில் தங்களது உறவு, நட்புகளுடன் திருமணம் செய்து கொள்வதை விரும்புகின்றனர்.

19. ஒவ்வொரு உல்லாச கப்பலிலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து அடைப்பதற்காக சிறை அறைகள் உண்டு. அதுபோன்று மரணம் அடைபவர்களின் உடல்களை பாதுகாத்து வைப்பதற்காக பிணவறைகளும் உண்டு.

20. பொதுவாக உல்லாச கப்பல்களில் பயணிக்கும் பயணிகளின் சராசரி வயது 50ஐ தாண்டியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கர்களில் 24 சதவீதம் பேர் உல்லாச கப்பல்களில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

21. உலகில் உள்ள அனைத்து உல்லாச கப்பல்களையும் கணக்கில் கொண்டால், ஒரே நேரத்தில் 5 லட்சம் பயணிகள் பயணிக்க முடியும். அந்தளவு இன்று உல்லாச கப்பல்களுக்கான வரவேற்பும், மோகமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 28 மில்லியன் பயணிகள் உல்லாசக் கப்பல்களில் பயணிக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

22. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது பல உல்லாச கப்பல்கள் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டன. ராணுவ வீரர்களை கொண்டு செல்வது, ராணுவ தளவாடங்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டன.

23. 1930களில் உல்லாச கப்பல் சுற்றுலாத் துறை நலிவடைந்தது. இந்த சூழலில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், தனது நாட்டிலுள்ள அனைத்து பணியாளர்களும் மானிய கட்டணத்தில் பயணிப்பதற்கான சலுகையை அறிவித்தார். அதுமுதல் உல்லாச கப்பல் சுற்றுலாத் துறை ஏற்றம் பெற துவங்கியது.

டைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்யங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்தவொரு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றபோது தனது கன்னிப் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது.

நூற்றாண்டை கடந்துவிட்டாலும், 1500 பயணிகளை பலி வாங்கிய இந்த விபத்தை உலகின் மிக மோசமான கடல் விபத்தாக கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பலின் ஆடம்பரத்தையும், அந்த கோர விபத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக டைட்டானிக் திரைப்படமும் வெளிவந்து நம் உள்ளங்களை உலுக்கியது. இந்த நிலையில், டைட்டானிக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிரமாண்டம்

கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.