சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருதும்,பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்தியா 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 78 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 322 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் சாம் கர்ரன் பொறுப்புடன் ஆடி கடைசி வரை போராடினார். அவர் 95 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மாலன் அரை சதம் அடித்து அவுட்டானார்.

இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினர். புவனேஷ்வர் குமார் 48வது ஓவரில் 4 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 49வது ஓவரில் 5 ரன்னும், நடராஜன் இறுதி ஓவரில் 6 ரன்னும் விட்டுக் கொடுத்தனர். இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டி போன்று நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று தனி மனிதனாக போராடிய சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

3 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் என மொத்தம் 219 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருது வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.