இன்று புனித வெள்ளி (02.04.2021)

மனித மாண்புகள் பேணி : இறைவழி வாழ்வோம்

இன்று உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் புனித வெள்ளி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மனிதனின் பாவங்களுக்கான இறைவனின் சித்தத்தை ஏற்று மனுமகன் சிலுவைச்சாவினைத் தழுவிக்கொண்ட தினமே புனித வெள்ளி. இந்தப் புனித வெள்ளி பெரியவெள்ளி, திருப்பாடுகளின் வெள்ளி என்று பல்வேறுபட்ட இடங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இன்று ஆலயங்கள் தோறும் யேசுவின் சிலுவைப் பாதைகளை நினைவுகூர்ந்து சிலுவைப்பாதை வழிபாடுகள் இடம்பெறும்.

இயேசுவின் பிறப்பு, அவருடைய போதனைகள், அவர் செய்த பணிகள், அவருடைய பாடுகள், அவருடைய சிலுவை மரணம் ஆகிய அனைத்தும் இறைதிட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளன.

சிலுவை மரணத்தினால் இயேசு மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க தன்னையே பலியாக்கினார்.

ஆண்டு தோறும் வந்து செல்லும் புனித வெள்ளி தினம் நம்மில் மனமாற்றங்களை உண்டாக்கியதா? இன்றும் மானிட நேயம் மறுக்கப்படும் உலக வாழ்வையே நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். இந்த நிலையை உருவாக்கும் காரணிகளே நாம் தான்.

நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒன்றிற்காக ஆத்துமத்தினை இழந்து இறைவிசுவாசம் இழந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

நாம் செய்கின்ற பாவகாரியங்களை விலக்கிக்கொள்கின்றோமா? அவற்றிலிருந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டுகின்றோமா? புலம்பெயர் நாடுகளில் வாழும் இன்றைய இளையதலைமுறை கத்;தோலிக்கர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தப் புனித வெள்ளி என்ன தினம் என்பதே தெரிவதில்லை.

வாழ்க்கையின் தடங்கள் மாறுபட்டு தறிகெட்டு வாழ்க்கையை வாழ்வதற்கு முற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் மட்டில் பெற்றோர்களின் கடமைகள் என்ன என்பதை நினைத்துப் பார்க்க பெற்றோர்களுக்கு நேரமில்லை.

நமக்காக சிலுவையில் தொங்கிய யேசு துன்பவேதனையை அனுபவித்தார். அந்த துன்ப வேளையிலும் அவர் கடவுளோடும் மற்றவரோடும் உறவாடினார்.

யேசு மனிதனாகப் பிறப்பெடுத்து துன்பங்கள் சுமந்து நமக்காக பலியானார். அவர் அந்த சிலுவை மரணத்திலும் தன்னை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மக்களை மன்னித்துள்ளார். கொரனோ துயரில் துவண்டுள்ள இன்றைய உலக நாடுகளிலுள்ள மக்களின் துன்பங்கள் நீங்குவதற்கு விசேட வேண்டுதல்களை செய்வோம்.

சிலுவை சுமந்த மரண வேளையில் அவர் ஏழு வார்த்தைகளை சொல்லிச் சென்றார்.

இந்த வார்த்தைகளை நமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க உறுதியெடுப்போம்.

1. “தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக் 23:34).

தம்மைச் சிலுவையில் அறைந்த கொலைகாரர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கின்றார். நமக்குத் தீமை செய்தவர்களைச் சபிக்கின்றோம்; பழிக்குப் பழிவாங்கத் துடிக்கின்றோம் ஆனால் இயேசுவோ தீமை செய்கிறவர்களுக்காகப் பரம தந்தையிடம் பரிந்து பேசுகிறார். யேசுவைப் பின்பற்றி நம் பகைவர்களை மன்னித்து, அவர்கள் புரிந்த குற்றங்களை மறந்து, அவர்களுக்கு நன்மை செய்வோம். பிறர் குற்றங்களை மனத்திலே நீண்டகாலம் வைத்திருந்தால், நமது மனம் புண்ணாகிச் சீழ்வடியும். நாம் குணமடைய பிறருடைய பிழைகளை மன்னிப்பது அவசியமாகும், “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் (லூக் 6:27

2. “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் (லூக் 23:43).

யேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருகள்வர்களில் ஒருவர் யேசுவிடம், “யேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று மன்றாடினான். யேசுவின் அரசு ஒருநாள் நிறைவாக வரும் என்று அவன் நம்பினான். இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

வாழ்நாள் முழுவதும் கொலையும் களவும் செய்த கள்வனுக்கு இயேசு பேரின்ப வீட்டை வாக்களிக்கிறார். இவ்வாறு அவனுக்கு நம்பிக்கை அளித்து, அவன் மூலமாக நமக்கும் நம்பிக்கை அளிக்கிறார்,

ஒருவர் தமது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் மனம் மாறலாம் எனக்கு வயதாகிவிட்டது: நான் பாவப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன், இனி என்னைத் திருத்திக்கொள்ள முடியாது, எனது வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது எனக்கு இனி விடியல் இல்லை என்று அவநம்பிக்கை அடையக்கூடாது. இயேசுவிடம் சென்று, இதயம் திறந்து பேசுவோம். அவர் நிச்சயமாக நமது குணத்தை மாற்றி, வாழ்வை மாற்றுவார். நமக்குப் புதுப் பொலிவும் வலுவும் கிடைக்கும்.

3. ‘தாயே, இவரே உம் மகன்; இவரே உம் தாய்” (யோவா 19:26)

யேசு தமது இறுதி இரத்தம்வரை சிந்தி எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டார். அவருடைய ஆடைகளைப் படைவீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எஞ்சி இருந்தது சிலுவை அருகில் நின்று கொண்டிருந்த அவரது தாய் மட்டுமே. அத்தாயையும் “இதே உம் தாய்” என்று கூறி யோவானிடம் ஒப்படைத்து, அதன் மூலம் அத்தாயை உலக மக்கள் அனைவர்க்கும் தாயாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். யோவான் மரியாவை ஏற்றக்கொண்டதுபோல, நாமும் அவரை நம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், யேசுவின் உயிலை, இறுதி விருப்பத்தை நாம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆகிறோம்.

  • RK

Leave A Reply

Your email address will not be published.