ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது! – கோட்டாவுக்கு சம்பந்தன் பதிலடி.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசுஅரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாகக் கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால், இலங்கை அரசால் அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கவே முடியாது. காலப்போக்கில் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும், இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வாறான நிலையில் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா? எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபோன்று தீர்மானங்கள் முன்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தையுமே நிராகரிக்க முடியாது.

அவ்வாறு நிராகரிப்பதாகக் கூறுவதானது, சர்வதேச தீர்மானங்களை மீறுவதாக அமையும். அதுமட்டுமன்றி சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதாகவே அமையும். இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இன ரீதியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

முன்னதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினரின் அறிக்கையில் இந்தச் சம்பவங்கள் விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும் அவ்விதமான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகவே, அந்தக் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன. இது மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கை அரசு அவ்விதமான விசாரணைகளை முன்னெடுத்திருக்கவில்லை.

எனவே, அவை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அக்கருமம் காலப்போக்கில் நிச்சயமாக இடம்பெறும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.