சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும்! டக்ளஸ் தேவானந்த்.

பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் வரவில் சகல மக்களின்
மனங்கள் தோறும், வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்வு பூக்கட்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

நான் கூறும் எமது மக்களின் புது மகிழ்வென்பது தத்தமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சகல மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ உரிமைகளோடு தலை நிமிர்வுடன் வாழ்வதேயாகும்.

அரசியலுரிமை, அபிவிருத்தி, அன்றாட வாழ்வியல் உரிமை என
எமது மக்கள் விரும்பும் எழிலார்ந்த வாழ்வை உருவாக்க
சகல அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும்
யதார்த்த பூர்வமான செயல் முறைக்கு முன்வர வேண்டும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அரசியலுரிமை என ஒரு புறமும்,. அபிவிருத்தி என இன்னொரு புறமும்
மட்டற்ற வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்குவதால்
எமது மக்கள் தொடர்ந்தும் திக்கற்று நிற்கும் துயர் நிலையே
நீடித்து வருகிறது.

ஆகவே,… எமதிரு கண்களாக விளங்கும் அரசியலுமையும்,
அபிவிருத்தியும் இணைந்த எமது மக்களின் இலட்சியக்கனவுகள்
ஈடேற வேண்டும்.

எமது மக்களின் சகல இழப்புகளுக்குமான பரிகாரம் தேடும்
துயர் துடைப்புகள் துரிதமாக நிகழ வேண்டும்.

வறுமையற்ற வாழ்வு நோக்கி நிமிர்ந்தெழுந்து சகல மக்களும்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடும் சூழல் நிலவ வேண்டும்.

சமகால சூழலில் சரியான திசைவழி நோக்கி பயணிப்பதன் உடாக
எமது மக்கள் எண்ணிய எதிர்கால இலட்சியங்களை எட்டிவிட முடியும்.
இந்த ஆழ்மன நம்பிக்கையோடு சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும் எனது அறிவார்ந்த வழிகாட்டலுடன்
வாழ்த்துக்களையும் கூறுகின்றேன்.

இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தேசிய நல்லிணக்க சிந்தனை செயற்பாடுகளை சகல தரப்பு மக்களும் பலப்படுத்துவதே ஒளி வீசும் உயரிய வாழ்விற்கு உரமிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.