யுத்தங்களுக்கிடையில்… -அசோகமித்திரன் -காலச்சுவடு 2010

யுத்தங்களுக்கிடையில்…

இது ஒரு தமிழ் குடும்பத்தின் அறுபதாண்டுக் கதை -அசோகமித்திரன்

-காலச்சுவடு 2010

அசோகமித்திரனின் பார்வையில் மனித மனங்களின் வெளிப்பாடுகளும், அதனோடு இணைக்கப்பட்ட  குடும்பங்களுக்களுக்கிடையேயான,  இடர் மிகுந்த காலப்பகுதியொன்றின் சிக்கல்களின் கச்சிதமான வெளிப்பாடுமே   இக்கதையின் கரு. பல்வேறு தனிப்பட்ட, பொருளாதார, சமூக சிக்கல்களில் உளரும் வேறுபட்ட மனிதர்களின் உறவுப்பாலம் இக்கதையை கட்டி எழுப்பியுள்ளது. இக்கதை முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களிடையே அகப்பட்டுக்கொண்ட ஒரு குடும்ப அமைப்பின் சவால்களை, முக்கியமாக அக்குடும்பங்களில் வாழ்க்கைப்பட்ட பெண்களின் சவால்களை,  காலங்களுக்கிடையில் எம்மை இழுத்துச் சென்று, காட்டுகிறது.

எல்லாக் காலப் பகுதிகளிலுமே பெண்களின் வாழ்வு அலைக்கழிக்கப்பட்டதாய் இருப்பது இக்கதையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கடந்து செல்ல முடியாதுள்ளது. பால்ய காலத்து விவாகங்களும், குடும்பப் பாரத்தை சுமந்து தம்மை சரியாக கவனிக்க முடியாத இக்கட்டில் நோய் வாய்ப்படுவதும் சாதாரணமாக்கப்பட்ட காலப்பகுதியது.  பெண்கள் அதையும் தாண்டி வந்திருக்கிறார்கள்.

ஒரு யுத்த பூமியில் நடக்கக் கூடிய அத்தனை மாற்றங்களையும் அதன் தாக்கங்களையும் புனைவினூடே வரைவது ஒரு கலை தான். இக்கதை நடந்த காலப்பகுதி வேறாக இருந்தாலும், ஒரு யுத்த பூமியில் இருந்து வெளியேறிய எமது அனுபவங்களையும் துயரையும் அதன் பின் விளைவுகளையும் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.  இக்கதை கடந்த நூற்றாண்டின் வரலாற்றின் ஒரு பகுதி.

இங்கு ஆங்கிலேய துரைமார்களின் பார்வையில் இந்திய மக்களின் வறுமையும், அவர்கள் கலாச்சாரமும்  போர்க்கால அவலங்களும் எப்படிப் பார்க்கப்பட்டது என்பதும் ஆங்கிலேயர்களாக இருப்பினும்,  எதிர்பார்ப்பில்லாத,  சக இந்திய மனிதர்களிடம் காட்டிய   அவர்களது பரஸ்பர அன்பும் வியப்பில் ஆழ்த்துகிறது.  அனைத்து இன மக்களிடையேயும் நல்லவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், இன்னும் வாழ்கிறார்கள் என்பது நெகிழ்வாகவே இருக்கிறது.

முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ராமேசனின் வார்த்தைகள் இதைக் கோடிட்டு காட்டுகின்றன.

ஒவ்வொரு முறையும் அந்த பங்களாவைத் தாண்டிப் போக நேரும் போதெல்லாம் ராமேசன் அந்த பங்களா லிருந்த வெள்ளைகாரத்துரையுடன் அவனுக்கு நேர்ந்த முதல் சந்திப்பை நினைக்கத் தவறியது கிடையாது.  அந்த ஒரு சந்திப்பு எப்படி மூன்று பேருடைய வாழ்க்கையையே புதிய திசையில் திருப்பி விட்டது? அவனை ஒரு இந்தியன் மலையத்தனை விசுவாசத்தோடு நினைத்து வணங்குகிறான் என்று அவனுக்குத் தெரியுமா?

 

மூன்று வீடுகளில் அடுப்பெரிவது அவனால் தான் என்று அவன் நினைத்துப் பார்ப்பானா?

அடிப்படையில் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து கதை நகர்ந்தாலும், அதன் பின்னணியில் ஒரு யுத்தகாலத்தின் காட்சிப்படுத்தலும் முக்கியமானதாய் இருக்கிறது.  மேற்கத்தையேய ஆக்கிரமிப்பின் தாக்கமும் இடர்களும் நிரம்பிய வாழ்வும் அதிலிருந்து மீண்டெழுவதற்கு இந்திய மக்கள் முன்னெடுத்த புரட்சிகளையும் போராட்டங்களையும் இக்காலகட்டத்தோடு நாம் தொடர்பு படுத்திப் பார்க்க கூடியதாய் இருக்கிறது.

வாசிப்பதற்கு இலகுவாய் உள்ள மொழி நடையும் வாசிப்பவர்களை கதை நடந்த காலப்பகுதிக்கே இழுத்துச் செல்லும் இயல்பான விபரணையும் இந்நாவலை ரசித்து வாசிக்க முடிந்ததற்கு இன்னொரு காரணம் என்பேன்.

https://www.amazon.in/dp/B0917DJJFZ/ref=cm_sw_r_wa_apa_glc_HEC1QHJ1VZ2CQ6QQ2FF0

Leave A Reply

Your email address will not be published.