வவுனியாவில் இராணுவம் மீது மோதியது மரக்கடத்தல் வாகனம்! – 2 சிப்பாய்கள் படுகாயம்

வவுனியாவில் மரங்களைக் கடத்திச் சென்ற வாகனம் ஒன்று மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏ – 9 வீதியில் வவுனியா நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதுடன், கடமையில் இருந்த இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இதனால் நீண்ட தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளார். மற்றொரு சிப்பாயும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மரங்களைக் கடத்திச் சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்துக்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்து ஓடியுள்ளார்.

அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.