‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் அரசமைப்புக்கு முரணல்ல – சட்டமா அதிபர் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசு முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார் என்று ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அறிவித்தலை மேற்கொள்காட்டி ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை, “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது அரசமைப்புக்கு முரணானவை அல்ல என்பதை நான் உங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த மசோதா அரசமைப்பின் 13ஆவது அரசமைப்பு சீர்திருத்தத்தில் விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கும் உட்பட்டது அல்ல. அவை நாடாளுமன்றத்தால் இயற்றப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர சட்டமா அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

எனினும், கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமிக்காத இலங்கையர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கின்றது எனவும், போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கியுள்ளது எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.