போர்ட் சிட்டி’க்கு எதிராக சர்வதேச அரங்கில் சதி! – ஆளும் கட்சி குற்றச்சாட்டு.

போர்ட் சிட்டி’க்கு எதிராக சர்வதேச அரங்கில் சதி! ஆளும் கட்சி குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுகத் நகரத்துக்கு எதிராக சர்வதேச அளவில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு தேசிய மட்டத்தில் ஒரு சிலர் ஆதரவாகச் செயற்படுகிறார்கள். அரசமைப்ப்புக்கு முரணாக அரசு ஒருபோதும் செயற்படாது. பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

கட்சியின் காரியாலயத்தில் இன்றும் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்தரப்பினரும், ஆளும் தரப்பில் ஒரு சிலரும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். துறைமுக நகர நடவடிக்கைகள் இதுவரையில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். இதன் காரணமாகவே கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிப்பான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்புத் துறைமுக நகர செயற்திட்டத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. துறைமுக நகரம் நாணய சுத்திகரிப்பு மத்திய நிலையமாக மாற்றம் பெறும் என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசமைப்புக்கு முரணாக அரசு ஒருபோதும் செயற்படாது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாகச் செயற்படுத்துவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.