வேற்றுமைகளை உடன் களையாவிடின் அரசை எவராலும் காப்பாற்ற முடியாது! – விமல் எச்சரிக்கை

அரசுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் களையவேண்டும். இல்லையேல் அரசை எவராலும் காப்பாற்ற முடியாது என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மே தின நிகழ்வுகளை அரசு தடுத்து நிறுத்தியமை ஜனநாயக விரோதமாகும். இலங்கையில் கொரோனாவைக் காரணம் காட்டி மே தினம் அன்று எந்த நிகழ்வுகளையும் நடத்தவேண்டாம் என்று இராணுவத்தளபதி ஊடாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது மக்கள் ஆணையுடன் அமைக்கப்பட்ட அரசு. எனவே மக்களின் உரிமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகளை அடியோடு நிறுத்துவது ஜனநாயக விரோதம்.

சுகாதார விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டு நிகழ்வுகளை பெரும் எடுப்பில் அல்லாமல் ஒரு கட்டமைப்புக்குள் நடத்தலாம் என்று அரசு அறிவித்திருக்கலாம். ஆனால், அரசுக்குள் இருக்கும் முக்கிய இரு தலைவர்களையும் (ஜனாதிபதி, பிரதமர்) இயக்குகின்ற ஒரு முக்கிய புள்ளிதான் இந்த நிகழ்வுகளை நிறுத்துவதற்கு மூல காரணமாக அமைந்துள்ளார்.

அரசுக்குள் இன்று எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு அந்த முக்கிய புள்ளிதான் காரணம். பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாம் புறக்கணித்ததில் நியாயம் உண்டு. இந்த நிலையில் மே தின நிகழ்வுகளை நாம் எவ்வாறு நடத்துவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. அரசுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் களையவேண்டும். இல்லையேல் அரசை எவராலும் காப்பாற்ற முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.