தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி வாயிலாக கூட்டம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தோடு சேர்ந்து கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 5 மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள், மே 2-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

அதன்படி, மேற்கு வங்காளம் மாநிலத்துக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. அந்தவகையில் தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த கருத்துக் கணிப்பு உண்மையா? பொய்யா? என்பது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தெரிந்துவிடும். இதற்கிடையில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இந்த கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான பிறகு, இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. சார்பில் இருக்கும் முகவர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்?. எந்த தவறும் நடக்காமல் இருப்பதை அவர்கள் எவ்வாறு உறுதி செய்ய வேண்டும்? என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.