எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் …. சண் தவராஜா

உலகின் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் கூட, கொரோனாத் தீ நுண்மியின் பரவல் வேகம் தணிந்ததாகத் தெரியவில்லை. இந்த வாரப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 15 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாப் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கிட்டத்தட்ட 32 இலட்சம் மரணங்கள் சம்பவித்து விட்டன. 
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் இருந்து தினமும் வரும் செய்திகள் உள்ளத்தை உலுக்குகின்றவையாக உள்ளன. வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்திய நடுவண் அரசின் மூடத் தனமான, அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறைகள் காரணமாக மக்கள் பெருந் துயரைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகியுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் காரியமாற்ற நினைக்கும் நரேந்திர மோடி ஆட்சியின் அலட்சியப் போக்கு காரணமாக இந்தியாவில் தினமும் ஆயிரக் கணக்கானோர் இறக்கும் நிலை உருவாகி உள்ளது.
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உலகப் பட்டியிலில் அதிக மரணங்களைச் சந்தித்த நாடாக தொடர்ந்து அமெரிக்காவே முன்நிலை வகிக்கின்றது. கிட்டத்தட்ட 3 கோடியே 30 இலட்சம் பேர் அந்த நாட்டில் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 5 இலட்சத்து 90 ஆயிரம் பேர் அந்த நாட்டில் இதுவரை மரணத்தைத் தழுவி உள்ளனர்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கோடியே 88 இலட்சம் பேர் இதுவரை தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மரணமடைந்தோரின் எண்ணிக்கை அங்கே இரண்டு இலட்சத்தைத் தொட்டுள்ளது. மரணமடைந்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டோடு ஒப்பிடுகையில் இது அரைவாசிக்கும் குறைவு என்ற போதிலும், தினமும் மூவாயிரத்து ஐநூறு பேருக்கு மேல் மரணித்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களுள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் பிரேசிலை மாத்திரமன்றி, அமெரிக்காவையே இந்தியா முந்திவிடக் கூடிய அபாயம் உள்ளது.
உலக மக்களுள் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிய நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவே முதலிடம் வகிக்கின்றது. அங்கே 13 கோடியே 80 இலட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது. எனினும், இது மொத்த சனத்தொகையில் 8.9 வீதம் மாத்திரமே என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
அதேவேளை, இஸ்ரேல் நாட்டில் 86 இலட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் குடித்தொகையில் 62.38 விழுக்காடு ஆகும். இரண்டாவதாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஐக்கிய இராச்சியம். இங்கே 50.22 விழுக்காடு மக்களுக்கும், பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 42.67 விழுக்காடு மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. (மேற்குலக நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உலகின் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவும், உலகின் முதலாவது கொரோனாத் தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த நாடான ரஸ்யாவும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த இரண்டு நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்பதுவும், இவை உலகின் பல நாடுகளுக்குத் தமது தடுப்பூசியை மிகக் குறைந்த விலையிலும், சில நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி வருகின்றன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கவை.)
கொரோனாக் கொள்ளைநோய் மரணங்களை ஏற்படுத்தியது மாத்திரமன்றி உலகளாவிய அடிப்படையில் சாமானிய மக்களின் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. மத்திய தர வகுப்பில் இருந்த மக்கள். வறுமைக் கோட்டை நோக்கிச் சென்றுள்ள அதேவேளை ஏலவே வறுமைக் கோட்டில் இருந்த மக்கள் பட்டினிச் சாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார வலுவுள்ள, மக்கள் மீது அக்கறை கொண்ட நாடுகள் மக்களின் துயர் துடைக்கப் பல்வேறு திட்டங்களை முன்வைத்துச் செயற்பட்டாலும், மக்கள் நலன்பற்றிக் கவலைகொள்ளாத மற்றும் பொருளாதார வலுவற்ற நாடுகள் செல்வந்த நாடுகளிடமும், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்பதைக் காண முடிகின்றது.
கொள்ளை நோய் காரணமாக பல இலட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் தமது தொழில்களை, வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றார்கள். இந்த நிலையில, சொந்த நாடுகளில் பிழைக்க முடியாது என்ற எண்ணத்துடன் நாடு விட்டு நாடு செல்லும் பயணங்களையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா நோக்கிப் படையெடுக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய மனித அவலங்களுக்கு மத்தியிலும் பயன் அடையாதோர் எவருமே இல்லை எனக் கூறிவிட முடியாது. அடக்கு முறை ஆட்சிகள் நடைபெறும் நாடுகளில் தத்தம் அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்த முடியாத சூழல் நிலவுவதால், அத்தகைய ஆட்சியாளர்கள் தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளார்கள். அவர்களுள் ஒருசிலர் பெருந்தொற்றுக் காலத்தைப் பாவித்து தங்கள் ‘கறை’களைக் கழுவிக் கொள்ள முயற்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் அத்தகைய ஆட்சியாளர்களுக்கு ஒரு தற்காலிக இடைவேளை கிடைத்துள்ளது என்றே கூறிவிட முடியும்.
மறுபுறம், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் புதிய தடுப்பூசியைக் கண்டு பிடித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து பெரும் இலாபத்தை ஈட்டி வருகின்றன. தடுப்பூசியைக் கண்டு பிடித்தமை ஒரு வகையில் மனித குலத்திற்குச் செய்த நன்மை என எடுத்துக் கொண்டாலும், அவற்றைப் பங்கிடுவதில் அந்த நிறுவனங்கள் கடைப்பிடித்துவரும் கொள்கைகள் அவை ஒன்றும் மனிதாபிமான அடிப்படையில் செயற்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
இன்றும் உலகின் வறிய நாடுகளுக்குப் போதுமான தடுப்பூசிகள் போய்ச் சேரவில்லை என்பதுவும், செல்வாக்குமிக்க, செல்வந்த நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்பதுவும் கசப்பான உண்மையாக உள்ளது.
இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் – சமூக உதவித் திட்டங்களின் ஒரு அங்கமாக – கொள்ளை நோயினால் தொழில் இழந்த மக்களுக்கு நிவாரணமாக பண உதவிகளை அரசாங்கங்கள் வழங்கியமை நினைவில் இருக்கலாம்.
மேற்குலக நாடுகளில், இத்தகைய உதவியை செஞ்சிலுவைச் சங்கம், கரித்தாஸ் போன்ற தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போன்றதாக இந்த உதவி தென்பட்டாலும், எதுவுமே இல்லாததற்கு இதுவே பெரிது என நினைத்துச் சந்தோசம் அடைய முடியும்.
ஆனால், நட்டமடையும் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் பெருமளவு நிதியை உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தனியார் துறையினருக்கு வழங்கி உள்ளன என்பது மக்களின் கவனத்தில் வராத ஒரு செய்தியாக இருக்கின்றது. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசல் புரசலாக இது தொடர்பான செய்திகள் வெளிவந்தாலும் கூட அவை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால், பன்னாட்டு ஊடகமான Forbes இல் வெளிவந்த தகவல் மூக்கில் விரல் வைக்கும் அளவில் உள்ளது.
கொள்ளை நோய் உலகை உலுக்கிய ஒரு வருட காலத்தில் உலக கோடீஸ்வரர்களுடைய செல்வம் 60 விழுக்காடு பெருகியுள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாக் கொள்ளை நோய் உலகைத் தாக்கிய போது 660 ஆக இருந்த உலகப் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 2,775 ஆக உயர்ந்துள்ளது. வேறு வகையில் இதனைச் சொல்வதானால் ஒவ்வொரு 17 மணி நேரத்துக்கு ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாகி உள்ளார். அத்தோடு 8 ட்ரில்லியன் டொலராக இருந்த ஒட்டு மொத்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 13.1 ட்ரில்லியானாக அதிகரித்துள்ளது.
எடுத்துக்காட்டாக அமேசன் நிறுவன உரிமையாளர் Jeff Bezos இன் சொத்து 177 பில்லியன் டொலராக அதிகரித்துள்ள அதேவேளை, இரண்டாம் இடத்தில் உள்ள ரெஸ்லா கார் உற்பத்தி நிறுவன உரிமையாளர் Elon Musk இன் சொத்து 151 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இதில் சுவராசியம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள முகநூல் நிறுவன உரிமையாளர் மார்க் சுக்கர்பேர்க் 50 பில்லியன் டொலரைக் கொரோனாக் கொள்ளை நோய்க் காலத்தில் மட்டும் சம்பாதித்துள்ளார் என்பதே. ரெஸ்லா நிறுவனம் 130 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இவை எவ்வாறு சாத்தியமாகியது? கொரோனாக் கொள்ளை நோய் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள உழைப்பாளிகளை இழந்துள்ளார்கள். தொழில்களை, வருவாயை இழந்துள்ளார்கள். தங்கள் சேமிப்பை இழந்துள்ளார்கள். அநேகர் தமது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளார்கள். ஆனால், இத்தனைக்கும் மத்தியில் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி, ஏற்கனவே பெரும் தனவந்தர்களாக உள்ளவர்களின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது.
அரசாங்கங்களின் தயவு இல்லாமல் அது நடைபெற்றிருக்கச் சாத்தியமில்லை. பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமது செல்வத்தை தங்கு தடையின்றி பெருக்கிக் கொள்வதற்கான தடைகளை நீக்குவதே உலகின் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளின் தலையாய கடமையாக இருந்து வருகின்றது. நிலுவையில் உள்ள வரிகளைத் தள்ளுபடி செய்தல், வரிச் சலுகைகளை வழங்குதல், மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்காமல் அத்தியாவசியமற்ற பொருட்களின் உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மக்களின் நலனை முன்நிறுத்தி முழு அடைப்புக்களை மேற்கொள்ள மறுத்து வருதல் என பெரும் செல்வந்தர்களின் தேவைகளை குறித்த அரசாங்கங்கள் நிறைவேற்றி வைக்கின்றன. இது மாத்திரமன்றி, பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து சேமிக்கப்பட்டு, பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான டொலர் பெறுமதியான கடன்களையும் இந்தக் காலப் பகுதியில் அரசாங்கங்கள் இரத்துச் செய்துள்ளன.
ஆனாலும், சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகள் மக்கள் நலவாழ்வு ஒன்றை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு – பெரு வணிக நிறுவனங்களின் நலன்களைப் புறந்தள்ளி – மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அந்தந்ந நாடுகளில் பெறுமதியான மனித உயிர்கள் பல காப்பாற்றப் பட்டிருக்கின்றன. அனைத்தையும் விட மக்கள் நலனே முக்கியம் என்ற செயற்பாட்டுக்கு இத்தகைய நாடுகள் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
பதிலாக, மக்கள் நலனை விடவும் பெரு முதலாளிகளின் பொருளீட்டலே பிரதானம் எனக் கருதிச் செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ஏனைய மேற்குலக நாடுகள் என்பவை தமது குடிமக்களைக் காவு கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
பொதுவுடமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த கார்ல் மார்க்ஸ் மிகச் சரியாகவே கூறியிருந்தார். “உலகின் ஒரு முனையில் அளவுக்கு அதிகமாகச் செல்வம் குவிகின்றது என்றால், மறுமுனையில் மக்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே அர்த்தம்.” 
இந்தக் கொரோனாக் கொள்ளை நோய்க் காலத்திலும் பொருந்தக் கூடிய மேற்கோளாக இது உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.