ராஜபக்ச அரசுக்கு எதிராக இறுக்கமான தீர்மானம் எடுக்கவேண்டும் சர்வதேசம்! முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து.

“உயிர் துறந்துபோன ஆத்மாக்களை ஆத்மார்த்தமாக நினைவுகூருவதற்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியையே வெறித்தனத்துடன் இடித்தழிக்கும் இராணுவம், போரின்போது தமிழ் மக்களை எப்படிக் கொன்று குவித்திருக்கும் என்பதை உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கு இனியும் தாலாட்டு பாடிக் கொண்டிருக்காது இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழரின் அடையாளம். எங்கள் உறவுகள் குருதிகள் கொப்பளிக்க கொல்லப்பட்ட தேசம். இனப்படுகொலையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மண். சிறிலங்கா அரசின் வெறியாட்டத்தால், சிங்கள – பௌத்தத்தின் வழி வந்து மகாவம்சத்து வரலாற்றில் ஊறிய படைகளால் தமிழர்கள் துடிக்கடித் துடிக்க கொல்லப்பட்ட நிலம். இறுதிப் போரின் அடையாளமாக இன்றும் இருப்பது முள்ளிவாய்க்கால்.

இனப்படுகொலையின் அடையாளமாகவும், எங்கள் உறவுகள் கண்ணீர்விட்டுக் கதறியழுது மன ஆறுதலடைவதற்காகவும் அந்த மண்ணில் அமைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் சிங்கள அரசுகளை எப்போதும் கிலி கொள்ளச் செய்தே வந்திருக்கின்றது. தடைகளால் நினைவேந்தலை முடக்க முயல்பவர்கள் இம்முறை அடையாளத்தையே அழித்தொழிக்க முயன்றிருக்கின்றார்கள்.

வரலாறுகளை அடுத்தடுத்த சந்ததிக்கு கடத்தும் வேர்கள் இந்த நினைவுத்தூபிகள். இவற்றைத் துடைந்தெறிந்தால் தமிழர் மனங்களிலிருந்து அந்த முள்ளிவாய்க்கால் என்னும் ஆறாத வடுவை காணாமல் ஆக்கிவிடலாம் என்று சிங்கள அரசும், இராணுவமும் கணக்குப்போடுகின்றது.

அதற்காகவே இரவோடு இரவாக இராணுவத்தின் படைபட்டாளம் காவல் காத்து நிற்க, நினைவுத்தூபி சேதாரமாக்கப்பட்டுள்ளது. நடுகைக் கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

கல்லறைகளை, மக்களின் உயிரிழப்புக்குச் சாட்சியான நினைவுத் தூபிகளையே கொலைவெறியோடு வீழ்த்திச் சரிக்கும் இவர்களா மனிதாபிமான போரை நடத்தியிருப்பார்கள்? மனச்சாட்சியுள்ளவர்களாக இருந்திருந்தால் எங்கள் அஞ்சலி உரிமையைதானே அனுமதித்திருப்பார்கள்?

யாருமற்ற – எந்தக் கண்காணிப்புமற்ற – சாட்சியமற்ற போரின்போது இவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதை இப்போது உலகின் கண்களுக்கு காட்டியிருக்கின்றார்கள். தங்களின் குரூர முகம் இதுதான் என்பதை முரசறைந்து சொல்லியிருக்கின்றார்கள். புத்தனின் வழியில் நடப்பதாகச் சொல்லும் இவர்கள் அவனை எட்டி உதைப்பதே தங்கள் கொள்கை என்பதை பறைசாற்றியிருக்கின்றார்கள்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் வேரறுக்கப்படுகின்றார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். இனியும் உள்ளக விசாரணை என்று சொல்லிக் கொண்டும், தடயங்களைச் சேகரிக்கின்றோம் என்று கதையளந்து கொண்டும் இருக்காமல், இருக்கின்ற இருப்பையே ஆழமாய் தோண்டி அவர்கள் அழிக்க முன்னர் நீதியை நிலைநாட்டுங்கள் என்று உலக நாடுகளிடம் உரக்கக் கேட்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.