ஊடகங்கள் கண்டு கொள்ளாத உலக போர் : சண் தவராஜா

மனிதகுல வரலாற்றில் மிகப் பாரிய போராக வர்ணிக்கப்படுகின்ற இரண்டு போர்கள் ‘உலகப் போர்’ என்ற பதங்களால் அறியப்படுகின்றன. அவற்றுள் அதிக அழிவை ஏற்படுத்திய போராக அமைந்தது இரண்டாம் உலகப் போர்.

உலகின் பலம் பொருந்திய நாடுகளுள் ஒன்றான யேர்மனியின் ஆட்சிப் பொறுப்பு அடொல்ப் ஹிற்லர் எனும் சர்வாதிகாரியின் கரங்களைச் சென்றடைந்ததால் உருவான மனித அவலமே இரண்டாம் உலகப் போர்.

நாசிசம் என்ற கேடுகெட்ட புதிய கொள்கையை உலகுக்கு அறிமுகம் செய்த ஹிற்லரால் 1939 செப்டெம்பர் 1 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட போர் ஆறு வருடங்கள் நீடித்தது மட்டுமல்லாமல் 60 மில்லியன் மக்களின் மரணத்துக்கும் காரணமானது. போரில் நேரடியாக ஈடுபட்ட 20 மில்லியன் படையினரைத் தவிர்த்து, மீதி 40 மில்லியன் மக்களும் போரின் பக்கவிளைவுகளான பசி, பட்டினி, தெற்று நோய், பழிவாங்குதல் உள்ளிட்ட காரணங்களால் பலிகொள்ளப்பட்டார்கள்.

போருக்குத் தலைமைதாங்கிய ஹிற்லரின் தற்கொலை, யேர்மன் தலைநகர் பேர்லினைக் கைப்பற்றிய சோவியத் படைகளிடம் மே 8 இல் யேர்மன் படையினரின் நிபந்தனையற்ற சரணாகதி என்பவற்றுடன் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்த போதிலும், ஹிற்லரின் யுத்தக் கூட்டாளியான யப்பான் சரணடைய மறுத்ததால் ஆசியப் பிராந்தியத்தில் யுத்தம் முடிவுக்கு வராதநிலை நீடித்தது.

தொடர்ந்து அமெரிக்கா யப்பான் மீது இரண்டு தடவைகளில் வீசிய அணுகுண்டுகள், யப்பானுக்கு எதிராக சீனாவின் மஞ்சூரியாப் பிராந்தியத்தில் சோவியத் மேற்கொண்ட படைநடவடிக்கைகள் என்பவை காரணமாக யப்பான் சரணடைய ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து 1945 செப்ரம்பர் 2 ஆம் திகதி இரண்டாம் உலகப் போர் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போரில் அதிகவிலை தந்த நாடு எனக் கணக்கிட்டால் அது அன்றைய சோவியத் ஒன்றியமே. இந்தப் போரில் சோவியத் நாடு தந்த மனிதவிலை மாத்திரம் 27 மில்லியன்.

இதில் 8.7 மில்லியன் மாத்திரமே யுத்தத்தில் நேரடியாகப் பங்குகொண்ட படையினர். மீதி அத்தனைபேரும் பொதுமக்களே. யுத்தத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சோவியத் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த நாசிப் படைகள் 68 மில்லியன் பொதுமக்களைக் பணயக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13.7 மில்லியன் மக்கள் கொலையாகிப் போகினர்.

இந்தப் போரில் சோவியத் ஒன்றியம் சந்தித்த பொருளாதாரன இழப்புக்கள் கணக்கற்றவை. யுத்த தளவாடங்களுக்கு அப்பால், குண்டு வீச்சில் அழிந்துபோன கட்டுமானங்கள், நாசிப் படையினரால் எரிக்கப்பட்ட கிராமங்கள், தொழிற்சாலைகள், பண்ணைகள், வீடுகள் எனக் கணக்கற்ற நாசங்களை சோவியத் நாடும், மக்களும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 76 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், ரஸ்யாவிலும், உலகப் போரில் ரஸ்யாவோடு கூட்டணி அமைத்துப் போரிட்ட நேச நாடுகளிலும் உள்ள மக்கள் மனதில் இன்னமும் மறக்க முடியாத நினைவுகளாக யுத்தத்தின் வடுக்கள் உள்ளன. அதேவேளை, ‘மாபெரும் தேசபக்தப் போர்’ என வர்ணிக்கப்படும் இந்த யுத்தத்தில் சோவியத் படையினரும், பொதுமக்களும் மேற்கொண்ட தீரம்செறிந்த சாதனைகள் இன்றும் பெருமிதத்துக்குரிய நினைவுகளாகக் கொண்டாடப்படுகின்றன.

அந்த வகையில், யேர்மனி போரில் தோற்கடிக்கப்பட்ட நாளை மே 9 ஆம் திகதியில் ஆண்டு தோறும் கொண்டாடும் வழக்கம் முன்னைய சோவியத் ஒன்றியத்திலும், தற்போதைய ரஸ்யக் கூட்டமைப்பிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டும், கொரோனக் கொள்ளை நோய் அபாயத்துக்கு மத்தியிலும், ரஸ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை, தலைமை அமைச்சர் விளாடிமிர் புட்டின் தலைமையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கொண்டாட்டத்தில் 12 ஆயிரம் படையினர் கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்டதுடன், ரஸ்யாவின் படைத்துறை வல்லமையைப் பறைசாற்றும் வகையில் படைத் தளவாடங்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது. அத்தோடு, மாபெரும் தேசபக்தப் போரில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்ட படையினர் ஒருசிலரும், அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பில் கலந்துகொண்ட படையினர், பேர்லின் தலைநகரில் யேர்மன் ஆட்சியின் தலைமையகமாகத் திகழ்ந்த Reich-stag இல் 1945 மே முதலாந் திகதி சோவியத் படையினரால் ஏற்றப்பட்ட செங்கொடியையும் தாங்கி வந்தனர். நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புட்டின், ‘மானுடத்தின் எதிரியான நாசிசம் தோற்கடிக்கப்பட்ட நாளைக் கொண்டாடும் அதேவேளை சோவியத் படையினரதும், மக்களதும் வீரத்தையும், தீரத்தையும் நினைவு கூர்வதாகத்’ தெரிவித்தார்.

மானுடகுல வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க நாட்களுள் ஒன்றான இந்த நாள், ரஸ்ய எல்லைகளைக் கடந்து ஒருசில நாடுகளின் நகரங்களில் மாத்திரம் கொண்டாடப்பட்ட, நினைவுகூரப்பட்ட ஒரு நாளாக விளங்கியது. இது எதனால்?

இதற்கான காரணம் ஒன்றேயொன்றே. 2 ஆம் உலகப் போரின் வெற்றியின் பங்குதாரர்களுள் ஒருவராக முன்னாள் சோவியத் ஒன்றியத்தை இருட்டடிப்பு செய்துவிட நினைக்கும் மேற்குலகின் நீண்டநாள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இது.

சோவியத் வெற்றியைக் கொண்டாடும் ரஸ்யாவுக்கு அன்றைய போரில் கூட்டாளிகளாக இருந்த பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற வல்லரசுகள் எதுவும் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஒரு நடிகையின் நாய் இறந்தால் கூட அதனை மிகப் பெரிய ஊடகச் செய்தியாக மாற்றும் பன்னாட்டு ஊடக நிறுவனங்கள் ரஸ்யாவில் நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. ஒருசில ஊடகங்களோ, ரஸ்யாவில் நடைபெற்ற வெற்றி நிகழ்வுகள் முன்னைநாள் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்ராலின் அவர்களின் புகழை மீள நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சியே என வர்ணித்து செய்திகளை வெளியிட்டிருந்தன.

போர் என்பதே மனிதர்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டதே. போருக்கான முகாந்திரம் எதுவாக இருந்தாலும் உயிர்க் கொலை என்பதே அதன் பிரதான அம்சம். போரின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறம் என ஒன்று இருந்தாலும், வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்களில் அனைத்து நேரங்களிலும் அறத்தைக் கடைப்பிடிப்பது என்பது நடைமுறைச் சாதியம் அற்றது என்பது உலகறிந்த உண்மை.

எனவே, போரில் தவறிழைக்காத ஒரு படைத் தளபதியோ, அரச தலைவரோ இருக்க முடியாது. ‘உங்களில் குற்றமற்றவன் முதல் கல்லெறியக் கடவான்’ என்ற பைபிள் வாசகத்தின் முன்னர் அனைவரும் குற்றவாளிகளே.

அது ஸ்ராலினுக்கும் பொருந்தும். சோவியத் ஆட்சியில் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கினார், 2 ஆம் உலகப் போரின் போது படுகொலைகளைப் புரிந்தார். குறிப்பாக, katyn (massacre)  படுகொலை என அறியப்படும் போலந்தில் கைது செய்யப்பட்ட 22,000 படையினரைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார் என அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பலப்பல.

ஆனாலும், ஸ்ராலின் தலைமையிலான செஞ்சேனை 2 ஆம் உலகப் போரில் நாசிப் படைகளை முறியடிக்கத் தவறியிருந்தால் இன்றைய ஐரோப்பாவின் தலைவிதி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்வது கூடக் கடினமானதே.

தற்கால ரஸ்யாவைப் பொறுத்தவரை அந்த நாட்டில் மிக அதிகமாக விரும்பப்படும் ஒரு நபரும், மிக அதிகமாக வெறுக்கப்படும் ஒரு நபரும் உள்ளார் என்றால் அது ஸ்ராலின் மாத்திரமே. ஸ்ராலினுக்கு நாடு முழுவதிலும் சிலைகள் நிறுவப்பட வேண்டும் என்று ஒரு பக்கம் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், ஸ்ராலின் ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பிலான கண்டனங்களும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஸ்ராலின் ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால், ஸ்ராலின் மீதான விமர்சனம் என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறிக் கொண்டு, 2 ஆம் உலகப் போரில் சோவியத் படையினர் நிகழ்த்திய சாதனைகளையும், சோவியத் மக்கள் மேற்கொண்ட தியாகங்களையும் நிராகரித்து விடவோ, கொச்சைப் படுத்தவோ யாரையும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடந்து கொள்வது மனித மாண்புகளுக்கு முரணானது. வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு ஒப்பானது. இதனை மேற்குலக சார்பு ஊடகங்கள் புரிந்து கொள்வது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.