ஆடைத் தொழில்சாலையில் கொரோனா பாரிய பரவலாக உருவெடுத்துள்ளது : அரச அதிபர் அறிவுறுத்தல்!

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பாரிய பரவலாக உருவெடுத்துள்ளதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மாவட்ட அராசங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றியவர்கள் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு கடமையாற்றிய 926 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பங்கள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்றார்கள்.

எனவே சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க படையினர் மற்றும் பொலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு மிகவும் வினையமாக வேண்டிக்கொள்கின்றோம்

மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டு மேலும் பி.சி.ஆர் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இனம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதில் கவனமாக இருக்கவேண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை நிறுத்தவேண்டும். இது ஒரு பாரிய பரவலாக வந்துகொண்டிருக்கின்ற காரணத்தினால் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை அவசியம் பின்பற்றவேண்டும்.

உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் சமூகத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கின்றது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.