ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் அவசர பேச்சு

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பிலுள்ள தூதுவர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் செயன்முறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் கொரோனாத் தடுப்பூசிகளை சமமாக அணுகிக்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆதரிக்கும் கோவெக்ஸ் வசதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு, இத்தாலி தூதுவர் ரீட்டா மன்னெல்லா, நெதர்லாந்து தூதுவர் டஞ்சா கொங்கிரிப், ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் சீபர்ட் மற்றும் ரூமேனியா தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.