செய்தி நிறுவனங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம்

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் செய்தி நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டடம் தகர்க்கப்பட்டமை மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் அமைந்துள்ள சர்வதேச ஊடக அலுவலகங்கள் சேதமாகியுள்ளன எனவும், ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மே மாதம் 13ஆம் திகதி இஸ்ரேல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலஸ்தீனின் உள்நாட்டு ஊடக நிறுவனங்கள், அல்ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி வரும் அஸோஸியேடட் பிரஸ் உட்பட 15 ஊடக நிறுவனங்கள் அமைந்துள்ள கோபுரம் தகர்க்கப்பட்டது.

“ஊடக நிறுவனங்கள் அமைந்திருப்பதை அறிந்த நிலையிலும் குறித்த கோபுரம் மீது தாக்குதல் நடத்தியமை ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் செயல்” என்றும் இலங்கை ஊடக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் காரணமாக பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் இலங்கை ஊடக அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.