கல்முனையில் வீடொன்றிலிருந்து ஹெரோயினுடன் 8 பேர் கைது

ஹெரோயின் போதை மாத்திரை போன்ற போதைப்பொருட்களை சூட்சுமமாக நீண்ட காலமாக வாடகை வீடு ஒன்றினை பெற்று விற்பனை செய்து வந்த 8 பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த 8 பேர் இன்று வியாழக்கிழமை (27) மாலை கல்முனை விசேட பிரிவிற்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கைதாகினர்.

இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் மேற்பார்வை செய்ததுடன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன், பொலிஸ் கொஸ்தாபல்களான அருண ( 75278 ), செலர்( 40313 ), நிமால் (81988) மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் றிஹால் (6045) ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கைத்தொலைபேசி – 14, இரகசியக் கமரா -1, ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகள், பொலிஸாரை மந்திரத்தினால் வசியப்படுத்தும் விபரங்கள் அடங்கிய தாள்கள், வங்கி சிட்டைகள், வங்கி அட்டைகள், குர்ஆன் பிரதிகள், கணனி விசைப்பலகை, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான உலகப் படத் தொகுதி, கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட வங்கி காசோலைகள், கடிதங்கள், இலங்கை புகழ் பெற்ற அரசியல்வாதிகளின் பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்கள், சார்ஜ்சர்கள், சீசா என்றழைக்கப்படும் போதைப்பொருளை நுகர பயன்படுத்தும் உபகரணம், லப்டெப் – 2 கணனி ,வன்பொருள் – 1 என்பன மீட்கப்பட்டதுடன் சுமார் 27 முதல் 40 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத 8 சந்தேக நபர்கள் கைதாகினர்.

இதில் கைதான ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கைதாகிய 8 பேரையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் போதைப் பொருளுடன் பலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர பொலிஸாரின் சுற்றி வளைப்பின் போது புகைப்படமாக மீட்கப்பட்டவர் ஒரு மந்திரவாதி எனவும் அந்நபரின் முன்னால் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பொலிஸாரை மந்திரம் மூலம் வசியப்படுத்தி கட்டுப்படுத்த இக்குழு நடவடிக்கை எடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.