தடுப்பூசி பற்றிய ஊடக தகவல்கள்: மத்திய அரசு விளக்கம்

ஜூன் மாதத்தில் 12 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாகவும், ஆனால் மே மாதத்தின் மொத்த கையிருப்பான 7.9 கோடி டோஸ்களில் இருந்து சுமாா் 5.8 கோடி டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மே 1 முதல் 31 வரை (ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படி) மொத்தம் சுமாா் 6.1 கோடி தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செலுத்தியுள்ளன. 1.6 கோடி டோஸ்கள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மே 1-31 ஆம் தேதி வரை கையிருப்பில் இருந்த மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சுமாா் 7.9 கோடி ஆகும்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் சில ஊடகங்கள் இந்தியாவின் தடுப்பூசி கொள்கையை விமா்சித்துள்ளன. தடுப்பூசி செலுத்துவதில் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குதல், தடுப்பூசி கொள்முதல், தோ்வு, அதன் விநியோகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வழிநடத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேசிய நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

முன்னுரிமை அளிக்கப்பட்ட பிரிவினா் வரிசையில் முதலில் மருத்துவ துறையைச் சோ்ந்தவா்களுக்கும், அதைத் தொடா்ந்து முன்களப் பணியாளா்களுக்கும், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதன்பிறகு கண்டறியப்பட்ட 20 இணை நோய்கள் உள்ள 45-59 வயது வரையிலானவா்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த அணுகுமுறையால் மருத்துவ ஊழியா்களில் 81 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கும், 84 சதவீதத்துக்கும் மேற்பட்ட முன்களப் பணியாளா்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 37% பேருக்கு முதல் தவணையும், இதே பிரிவில் 32% பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மே 1-ஆம் தேதி முதல் மத்திய மருந்துகள் ஆய்வகம் ஒப்புதல் அளித்த மொத்த தடுப்பூசி டோஸ்களில் இந்திய அரசு 50 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்கிறது. முன்பைப் போலவே தற்போதும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கும். எஞ்சியுள்ள 50% டோஸ்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தனியாா் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

22 கோடி: இதற்கிடையே, புதன்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்கள் 22 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. மொத்தம் 22,08,62,449 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.