நட்பாக உறவாடும் ஆபத்தான பகைவன் : சண் தவராஜா

“தான் கள்ளன், பிறரை நம்பான்” என்பது தமிழில் வழக்கில் உள்ள ஒரு சொலவடை. தன்னைத் தவிர மற்றவர்கள் யாவரையும் அயோக்கியர்கள் எனக் கருதும் தன்மை கொண்டவர்களை விளக்க இந்தச் சொலவடை பாவிக்கப்படுகின்றது. தனிமனித வாழ்விலும், பொது வாழ்விலும் பொருந்திவரும் இந்தச் சொலவடை பன்னாட்டு அரசியலிலும் அவ்வப்போது நினைவுபடுத்தப்படுகின்றது.

அத்தகைய ஒரு நினைவுபடுத்தல் யூன் மாதம் முதலாம் திகதி, டென்மார்க் நாட்டுத் தொலைக்காட்சியில் வெளியான ஒரு செய்தி மூலம் நிகழ்ந்திருக்கிறது.
NSA என அழைக்கப்படும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு, டென்மார்க் நாட்டின் தேசிய படைத்துறை உளவு அமைப்புடன் இணைந்து 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை யேர்மன் அரசுத் தலைவி அங்கெலா மேர்க்கல் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு உளவு பார்க்கப்பட்டவர்களில் யேர்மனியின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங் வோல்ரர் ஸ்ரைன்மையர், மேனாள் எதிர்கட்சித் தலைவர் பியர் ஸ்ரைன்புறுக் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யேர்மனியைத் தவிர்த்து பிரான்ஸ், சுவீடன் மற்றும் நோர்வே நாடுகளிலும் இத்தகைய ஒட்டுக்கேட்டல் நடவடிக்கைகள் நிகழ்ந்திருந்தன என அந்தச் செய்தி வர்ணிக்கின்றது. டென்மார்க் நாட்டுக் கடலுக்கு ஊடாகப் பயணிக்கும் தொலைத்தொடர்புக் கம்பி வடங்களில் இருந்தே இத்தகைய உளவுபார்த்தல் நிகழ்ந்திருப்பதாக, இந்த மோசடியில் பங்கு கொண்டிருந்த 9 சாட்சியங்களிடம் இருந்து பெற்ற தகவல்களை டென்மார்க் தொலைக்காட்சி வழங்கியிருந்தது.

இந்தக் கட்டுரை எழுதும்வரை அமெரிக்கத் தரப்பிலிருந்து பதில் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பாகக் கவலை வெளியிட்ட டென்மார்க் தலைமை அமைச்சர் மெற்றே பிரடெரிக்சன் அமெரிக்கா இது விடயத்தில் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளான யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் “நட்பு நாடுகளுக்கு இடையில் இதுபோன்று நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நட்பு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் இதுபோன்று நடைபெறுவதை சகித்துக்கொள்ளவே முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.

“ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பு வழங்கும் நட்பு நாடுகளுக்கு ஒன்றையொன்று உழவு பார்க்கும் தேவை இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது” என்கிறார் நோர்வே தலைமை அமைச்சர் எர்னா சொல்பேர்க்.

‘டன்ஹம்மர் நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்ட இந்த இணைந்த ஒட்டுக்கேட்டல் நடவடிக்கை தொடர்பாக டென்மார்க் நாட்டின் தேசிய படைத்துறை உளவு அமைப்பு 2015 இல் ஒரு புலன் விசாரணையைத் தொடங்கியது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு அறியாதவகையில் ‘ஹக்கர்கள்’ எனப்படும் இணையத் தகவல்களைத் திருடும் நால்வர் பணிக்கமர்த்தப்பட்டு மிக இரகசியமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை 2018 இல் டென்மார்க் புலனாய்வு மேற்பார்வை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்த பல அதிகாரிகள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள றினே பிரம்சன் அவர்களின் பதவிக் காலத்திலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அங்கெலா மேர்க்கல் அவர்களின் தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டல் விவகாரம் தொடர்பாகப் பேசப்படுவது இதுவே முதன்முறை இல்லை. 2003 ஆம் ஆண்டில் எட்வேட் ஸ்னோடன் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பின் மேனாள் பணியாளரும், தற்போது ரஸ்யாவில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பவருமான ஸ்னோடன் அமெரிக்க அரசின் இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த யேர்மனி, அமெரிக்காவிடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் விளக்கமும் கோரியிருந்தது. இதற்குப் பதிலளித்த அமெரிக்கா ஒட்டுக்கேட்டல் விவகாரத்தை முற்றாக மறுக்கவில்லை. அப்போதைய அமெரிக்க அரசுத் தலைவரான பராக் ஒபாமா, “இவ்வாறான ஒட்டுக்கேட்டல் தற்போது நடைபெறவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு நடைபெறாது” என வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், தற்போது வெளியாகிய தகவல்கள் அமெரிக்கா அன்று சொன்னது அப்பட்டமான பொய் என்பதை நிரூபணம் செய்வதாக உள்ளதுடன், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னரும் அங்கெலா மேர்க்கல் உள்ளிட்டோரின் மீதான ஒட்டுக்கேட்டல் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

ஒன்றுக்கொன்று எதிரான நாடுகள் தமது பகை நாடுகள் தொடர்பான ஒட்டுக்கேட்டலில் ஈடுபடுவது பன்னாட்டு உறவுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக இருந்து வருகின்றது. ஆனால், நட்புநாடுகள் மீது ஒட்டுக்கேட்டல் வழிமுறைகளைப் பாவிப்பது என்பது ‘தன்னைத் தவிர மற்ற எவனும் யோக்கியன் இல்லை’ எனச் சொல்வதற்கு ஒப்பானதே. உலக அரங்கில் மேற்குலகச் சிந்தனைக்குத் தலைமை தாங்கும் நாடு அமெரிக்கா என்றால், அதன் கொள்கை யாவற்றையும் அட்சரம் பிசகாமல் ஏற்றுக்கொண்டு வழியொழுகும் அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இருந்து வருகின்றது. சில வேளைகளில், பன்னாட்டுச் சட்டங்களையும் மீறி, மாண்புகளைப் புறந்தள்ளி அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடும் போக்கையே ஐரோப்பா கடைப்பிடித்து வருகின்றது. இருந்தும் கூட தனது பங்காளிகளையே நம்பாமல் அமெரிக்க நடந்து கொள்கின்றது.

அமெரிக்கா இதுபோன்று நடந்து கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆச்சரியம்தரும் விடயமும் இல்லை. ஆனால், இதுபோன்று அமெரிக்கா அம்பலப்பட்டு நிற்கும் வேளைகளிலேயே, ரஸ்யா தொடர்பாகவும் சீனா தொடர்பாகவும் அமெரிக்கா தொடர்ச்சியாக முன்வைத்துவரும் உளவுபார்த்தல் குற்றச்சட்டுகளின் உண்மைத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்காவின் தார்மீகம் தொடர்பாகவும், ஊடகங்களின் துணையோடு அமெரிக்கா மேற்கொண்டுவரும் தொடர் பரப்புரைகள் தொடர்பாகவும் ஐயங்கள் எழுகின்றன.

டென்மார்க் நாட்டின் தேசிய படைத்துறை உளவு அமைப்பு, அமெரிக்காவுடன் இணைந்து சட்டத்துக்கு முரணான வகையில் வேலை பார்ப்பது இதுவே முதல்முறை அல்ல. கடந்த வருடத்தில் தனது சொந்த நாட்டின் மீதே உளவுபார்த்த கதையொன்று வெளியாகியிருந்தது. டென்மார்க் வசமுள்ள எப்-16 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக தனது தயாரிப்பான எப்-35 ரக விமானங்களை விற்பதற்கு முயற்சிசெய்த அமெரிக்கா, ஈரோபைற்றர்ஸ் எனப்படும் ஐரோப்பிய கூட்டுத் தயாரிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்ய டென்மார்க் விரும்புகிறதா என அறிய டென்மார்க் நாட்டின் தேசிய படைத்துறை உளவு அமைப்பையே பயன்படுத்தி இருந்தது. சொந்த நாட்டின் நலனைப் பேணும் நோக்குடன் உருவாக்கப்பட்ட தேசிய படைத்துறை உளவு அமைப்பை, தனது நாட்டின் நலனுக்கு எதிராகவே செயற்படக்கூடியதாகப் பயன்படுத்தும் அளவிற்கு அமெரிக்காவின் வல்லமை உள்ளதை இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும்.

இத்தனைக்கும் பிறகும் தனது சொந்தக்காலில் நிற்கும் முடிவுக்கு ஐரோப்பா வந்துவிடும் எனக் கனவிலும் நினைத்துவிடக் கூடாது. எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவதும், மன்னிப்புக் கேட்பதும், மனம் வருந்துவதும் அமெரிக்காவுக்குக் கைவந்த கலை. அதேபோன்று அமெரிக்கா விடயத்தில் ‘மன்னிப்போம், மறப்போம்’ என முடிவு செய்வதும் ஐரோப்பாவின் வழக்கம்.

அமெரிக்க அரசுத் தலைவரான ஜோ பைடன் அவர்கள் இம்மாதம் 11 முதல் 13 வரை ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறார். இவர் உதவி அரசுத் தலைவராக இருந்த காலத்தில்தான் குறித்த ஒட்டுக்கேட்டல் விடயங்கள் நடந்தேறியுள்ளன. “ஜோ பைடன் குறித்த ஒட்டுக்கேட்டல் விவகாரத்தில் முழுவதுமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றார். எனவே அவர் டென்மார்க்குக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்” என்கிறார் எட்வட் ஸ்னோடன். இது விடயத்தில் புதிதாக எதுவும் சொல்வதற்கு ஜோ பைடனிடம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘குட்டக் குட்டக் குனிபவன் மடையன்’ என்பது சாதாரண மனநிலையில் உள்ள யாவருக்கும் புரியும். ஐரோப்பிய நாடுகளுக்குப் புரியுமா?

Leave A Reply

Your email address will not be published.