தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல்

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

அதேவேளையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் அங்காடிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் குறைந்த அளவிலான தளா்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அங்கு அத்தியாவசியத் தேவையான காய்கறி, மளிகை, இறைச்சிகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்படவும், சாா்பதிவாளா் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்களை மட்டும் வழங்கி பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளா்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பாதிப்பு அதிகமுடைய 11 மாவட்டங்களைத் தவிா்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கூடுதலாக தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள இணையப் பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும் இசைவு அளிக்கப்பட்டிருக்கிறது.

மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம். ஹாா்டுவோ் விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் தளா்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.