கொரோனா ஒழிப்புக்கு ஆதரவு தாருங்கள்! – மக்களிடம் மஹிந்த மன்றாட்டம்

“தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்தச் சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள ஓர் அரசு என்ற ரீதியில் நாம் தயார். பயணத் தடையின்போது மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்த போதிலும் ஓர் உயிரின் மதிப்பறிந்து அரசு முன்னெடுத்துவரும் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதகக்ச  மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அலரி மாளிகையில் இருந்தவாறு குறித்த வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு பிரதமரின் தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.
அங்கு  பிரதமர் உரையாற்றும்போது,

“சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாம் நாட்டைக் கட்டியெழுப்ப மக்களுக்கு உறுதியளித்தோம். கொரோனாத் தொற்றுக்கு மத்தியிலேனும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என ஜனாதிபதி எம் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தத் தொற்று நிலைமை எதுவும் இல்லாமலேயே இன்று உள்ள எதிர்க்கட்சி அன்று எந்தவொரு வேலையும் செய்யாதிருந்தது. நாம் என்ன செய்கின்றோம் என இன்று அவர்கள் எம்மிடம் கேட்கின்றனர்.

ஒரு பொறுப்புள்ள அரசாக நாங்கள் மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவோம் என்று உறுதியளித்தோம். தடுப்பூசி மூலம் எங்கள் மக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயற்படுத்துகின்றோம். சில குறைபாடுகளைச் சரிசெய்ய முன்வந்துள்ளோம்.

இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அதை ஆதரிக்கும் மக்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சிலருக்கு அதனைச் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இங்கேயும் அங்கேயும் சொல்லி அதை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். தடுப்பூசி போடும்போது அவர் இறந்துவிடுவார் என்றும் கூறினர். மக்களைப் பயமுறுத்த முயன்றனர்.

எதிர்க்கட்சிக்கு நாம் சொல்வது இதுபோன்ற பொய்களைப் பரப்பி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். இந்தத் தொற்று நம் அனைவருக்கும் ஒரு சவால். இந்தச் சவாலை சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் அரசின் தடுப்பூசி திட்டத்தைப் பாராட்டுவதை நான் கண்டேன். இந்த நேரத்தில் இந்தச் சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வதையே நாட்டு மக்களும் நம்புகிறார்கள்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், உங்கள் அனைவரின் உயிரையும் மதிக்கின்றோம். எனவே, அரசால் மேற்கொள்ளப்படும் திட்டத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும். பின்னர் முழு நாடும் பாதுகாக்கப்படும்.

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் இந்தச் சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஓர் அரசு என்ற ரீதியில் நாம் தயார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.