அதிவேக நெடுஞ்சாலை, மேம்பாலங்கள் நிர்மாணப் பணிகள் மஹிந்தவால் அங்குரார்ப்பணம்!

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற நெடுஞ்சாலை உள்ளிட்ட 5 திட்டங்களின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக அலரிமாளிகையிலிருந்து இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களைப் போன்றே, நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் நிலவும் கடுமையான வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அதற்கமையவே, பிரதமரின் ஆலோசனைக்கமைய, கொழும்பு – கண்டி நகரங்களை அண்மித்ததாக நிலவும் பாரிய வாகன நெரிசல்களுக்குத் தீர்வாக மேம்பாலங்களை அமைக்கவும், புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையில் அதிவேக நெடுஞ்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 16.4 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான குறித்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த அதிவேக வீதிக்காக 134.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தால் புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரை உயரமான நெடுஞ்சாலையை 36 மாதங்களில் நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொஹுவளை சந்தியில் ஒரு மேம்பாலமும், கண்டி, கெட்டம்பே சந்தியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளன.

கொம்பனித்தெரு ரயில் கடவை ஊடாக நீதியரசர் அக்பர் மாவத்தையையும், உத்ராநந்த மாவத்தையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பேரே வாவி மற்றும் கொம்பனித்தெரு ஊடாக சாரணர் வீதி மற்றும் சித்தம்பலம் ஏ கார்டினர் வீதிகளை இணைக்கும் மற்றொரு மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.