தமிழ்நாட்டு மக்களிடையே கொரோனா எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது: அரசு நடத்திய ஆய்வில் தகவல்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி தொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த, 765 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் ஊரகப் பகுதிகளாக இருந்தால் ஒரு கிராமம், நகர்ப்புறமாக இருந்தால் ஒரு தெரு என தேர்தெடுக்கப்பட்டு, தலா 30 பேரிடம் மாதிகள் சேகரிக்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட 22,905 மாதிரிகள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவர்களில் 23 சதவிகிதம் பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 சதவிகிதம் பேருக்கும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டத்தில் 9 சதவிகிதம் பேரும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு 22,690 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 31 சதவிகிதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தனர். இதனால், ஐந்து மாத இடைவெளியில் நடத்திய இரு ஆய்வுகளில், தமிழ்நாட்டு மக்களிடையே கொரோனா எதிர்ப்பு சக்தி 8 சதவிகிதம் அளவிற்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதற்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளது. முதலாவதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அலை உச்சம் தொட்ட பிறகு, நான்கு வாரங்கள் கழித்தே முதல் ஆய்வு நடத்தப்பட்டது. இதனால், தொற்றாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாக போதிய நேரம் இருந்தது.

ஆனால் இம்முறை இரண்டாவது அலை தொடங்கும் போதே அதாவது ஏப்ரல் மாதத்திலேயே ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்கள் கழித்து ஆய்வு நடத்தியிருந்தால் எதிர்ப்பு சக்தி உருவாக போதிய நேரம் இருந்து இருக்கும் என குறிப்பிடுகின்றனர். முதல் அலையில் பாதித்து எதிர்ப்பு சக்தி உருவானவர்களுக்கு நவம்பர் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில், எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதாக விளக்கமளித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மற்ற வயதினர் கொரோனா எதிர்ப்பு சக்தி இல்லாமலே இருந்திருப்பார்கள் என கருதப்படுகிறது. உருமாறிய டெல்டா கொரோனா பரவியதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், கொரோனா எதிர்ப்பு சக்தி தொடர்பாக ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் அடுத்த கட்ட ஆய்வுகளை நடத்த பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.