ஒட்சிசன் தேவைப்படுவோர் வீதம் உயர்வு! ஆபத்தான கட்டத்துக்கு நகர்கின்றது நாடு! – GMOA எச்சரிக்கை

“கொரோனாத் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவைப்படுவோர் வீதத்தில் இலங்கை தென்கிழக்கு ஆசியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இலங்கை ஆபத்தான கட்டத்துக்கு நகர்வதையே இது எடுத்துக்காட்டுகின்றது.”

– இவ்வாறு இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நாளாந்தம் அசாதாரணமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 5ஆம் திகதி 48 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இது அதிகளவான எண்ணிக்கையாகும்.

பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தொற்றாளர் எண்ணிக்கையைக் குறைத்து, உயிரிழப்புக்களைக் குறைத்து விடலாம் என்று எதிர்பார்த்தபோதும் அது நடைபெறவில்லை.

கொரோனாத் தொற்றை முகாமைத்துவம் செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு போதுமாக இல்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினாலேயே தொற்றை எதிர்பார்த்த அளவுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

பல்வேறு சிக்கலான நோய் நிலைமை உள்ள கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஒட்சிசன் தேவைப்படுகின்ற நோயாளர்கள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் ஒட்சிசன் தேவைப்படும் நிலைமையை பார்த்தால், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 441 சதவீதத்தால் இலங்கையில் அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் நேபாளம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் வியட்நாமும் உள்ளன. மூன்றாவது இடத்தில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உயிரிழப்புக்கள் அதிகமாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே கொரோனாத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.