ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: எதிர்கட்சி துணைத் தலைவர், கொறடா பதவிகள் யாருக்கு?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக ஜூன் 14ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது அதிமுக. எதிர்கட்சி துணை தலைவர் யார் ? கொறடாவிற்கான அதிகாரங்கள் என்ன ? பார்க்கலாம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து,ஒரு மாதம் கடந்தும் எதிர்கட்சி துணை தலைவர், கொறடாவை தேர்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில் இந்த இரு பொறுப்புகளுக்குமான நபர்களை தேர்ந்தெடுக்க ஜூன் 14ம் தேதி எம் எல் ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது அதிமுக.

எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், துணை தலைவராக ஓ.பன்னீசெல்வம் தான் நியமிக்கப்படுவார் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஓபிஎஸ் எதிர்கட்சி துணை தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே தொடர தான் விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே முன்னாள் அமைச்சர்களான வைத்தியலிங்கம் அல்லது நத்தம் விஸ்வநாதன் துணை தலைவராக அதிமுக தேர்ந்தெடுக்கும் என கூறப்படுகிறது.

சட்டப்பேரவைக்குள் எம் எல் ஏக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க பதவி கொறடா. சட்டமன்ற குழு தலைவராகவே இருந்தாலும் கொறடாவின் உத்தரவுகளுக்கு சட்டப்பேரவைக்குள் கட்டுப்பட வேண்டும் என்பது மரபு. ஒரு கட்சியின் உறுப்பினர் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டாலும் அவரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் கொறடாவிற்கே உள்ளதாக சட்டமன்ற விதிகள் சொல்கிறது.

இதனால் கொறடா பொறுப்பை மூத்த உறுப்பினருக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார்.

சமூக ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வன்னியர் சமுகத்தை சார்ந்த முன்னாள் அமைச்சர்களான கேபி முனுசாமி அல்லது கே பி அன்பழகன் கொறடாவாக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்துவிட்டாலும் அதிமுகவில் நடைபெறும் யுத்தம் முடிந்தபாடில்லை. ஜூன் 14ம் தேதியாவது முடிவுக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பே அதிமுகவினர் மத்தியில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.