வடக்குக்கு இம்மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி! – கோட்டாபய தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இந்த மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றியவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்படும்போது ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசிகள் வழங்கக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இலங்கையிலுள்ள 9 மாகாணங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசியல் தலையீடு

தென்னிலங்கையைச் சேர்ந்த சுகாதாரப் பணிப்பாளர்கள், கொரோனாத் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையில் அதிகரித்த அரசியல் தலையீடு காணப்படுகின்றது என்று இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், தடுப்பூசி ஏற்றலுக்கான முன்னுரிமையை அடிக்கடி மாற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

வடக்கு நிலவரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் கட்டத் தடுப்பூசி ஏற்றல் விரைவாக நடைபெற்று முடிந்ததை ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களுக்கும் தடுப்பூசி இன்னமும் ஏற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபச்ச, ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ள 10 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசியில் இரண்டாவது டோஸ் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ளது. இதன்போது வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதலாவது டோஸை வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிவுகள் அவசியம்

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படும்போது அது தொடர்பான பதிவுகள் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு டோஸூம் ஏற்றியவர்களுக்கு விசேட சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.