கொடிய ‘டெல்டா’ வைரஸ் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து! பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை.

கொழும்பு, தெமட்டகொடைப் பகுதியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவில் பரவி வரும் கொடிய ‘டெல்டா’ கொரோனா வைரஸ் வகை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு அதிக வீரியம் கொண்ட டெல்டா (பி.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றுடன் கொழும்பு, தெமட்டகொடைப் பிரதேசத்தில் ஐவர் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு ‘டெல்டா’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள தெமட்டகொடை – 66 வத்தைப் பகுதியில் குறைந்த வசதிகளுடன் 149 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் வசித்து வருகின்றனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தூய்மைப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும், பலர் ஓட்டோ சாரதிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பின்னணியில், புதிய ‘டெல்டா’ வைரஸ் வகை நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய கடுமையான ஆபத்து உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

இது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.