கொரோனா தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கச் சதி முயற்சி! – ஒழுக்காற்று விசாரணை என்கிறார் சன்ன ஜயசுமன.

“நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக பிழையான தரவுகளை வழங்கியவர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் நூற்றுக்கு மூன்று, நான்கு வீதமான சதிகாரர்கள், நாசக்காரர்கள் இருக்கின்றனர். அந்த நூற்றுக்கு மூன்று நான்கு வீதமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புடன் பதவிகளுக்கு வரும் போது, சில நேரங்களில் எண்களை மாற்றுவதன் மூலம் அரசைக் கவிழ்க்க முடியும் என நினைத்து பணியாற்றியதாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைத்ததாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

இதனிடையே, நோய் குறித்த தரவுகளுடன் தொடர்புடைய சதிக் குற்றச்சாட்டு தொடர்பில் அரச மருத்துவ சங்கம் கருத்துத் தெரிவித்தது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது:-

“இது சூழ்ச்சி சேர் என கொரோனா குழுவில் ஒருவர் கூறினார். மறுநாள் சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சதிகாரரே, சதி எனக் கூறினார். அனில் ஜாசிங்கவை இரண்டு மாதங்கள் வீட்டுக்கு அனுப்பினர். பின்னர், இரண்டு மாத இடைவௌியில் பலிக்கு எவரையேனும் தேடுகின்றனர். இறுதிப் பலியே, தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர. இங்கு, உலகத்துடனான தரவுக் கடத்தல் உள்ளது. தரவுகளைத் திருடி எமது தொழிற்சங்கம் விற்கின்றது. சதியில் ஈடுபட்டது யார்? இது சர்வதேச தரவுக் கடத்தல். விற்க முடியும்.

இந்தத் தரவுகள் சுதத் சமரவீரவிடம் இருந்தபோது தமக்கு வழங்குமாறு தொழிற்சங்கம் கோரியது. அவர் வழங்கவில்லை. வழங்காமைக்கான பிரதிபலனையே இன்று அவர் அனுபவிக்கின்றார்.

இந்த நாட்டின் மக்கள் உயிரிழப்பார்களாயின், அதனைத் தடுப்பதற்கு ஏதேனும் வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டும். அவ்வாறன்றி, சதிகாரர்கள் சதிகாரர்கள் எனக் கூறி பிரச்சினையைத் தீர்க்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.