வாட்ஸ் அப்பில் ஜியோ மார்ட்: இ-காமர்ஸ் வணிகத்தின் புதிய பரிணாமம் – முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்!

ஃபேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப் வழியாக ஜியோ மார்ட்டை இணைத்து இ-காமர்ஸ் வணிகத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டம் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி விளக்கியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பல்வேறு எதிர்காலத் திட்டங்கள், அறிமுகங்கள் என என்னற்ற திட்டங்களை முகேஷ் அம்பானி அறிவித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் ஆன்லைன் இ-காமர்ஸ் வணிகமான ஜியோ மார்ட் சோதனை முயற்சியாக கடந்த ஆண்டு வாட்ஸ் அப்புடன் இணைக்கப்பட்டு அதன் வழியாக மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவி மும்பை, தானே மற்றும் கல்யான் பகுதிகளில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வரும் இதனை விரைவில் முழு வெர்ஷனாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகேஷ் அம்பானி பேசுகையில், வலுவான சில்லறை மளிகை சங்கிலியாக விளங்கும் ஜியோ மார்ட் அடுத்த சில காலாண்டுகளுக்குள் முழுமையான வெர்ஷனாக வெளிவரும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அன்றாட தேவைக்கான மளிகை உள்ளிட்ட பொருட்களை மிக எளிதாக வாட்ஸ் அப் வாயிலாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். இதற்காக வாட்ஸ் அப்பில் இருந்து எக்ஸ்டர்னலாக எங்கும் செல்லத்தேவையில்லை. வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் தளமாக இது விளங்கும். விரைவில் ஒரு கோடி வணிகர்கள் ஜியோ மார்ட்டில் இணைந்து டிஜிட்டல் முறையில் சேவைகளை பெற்று பயன்பெறத் தொடங்குவார்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசூர் கிளவுட் சேவைகளை பெறுவதற்காக அந்நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப் அமைக்க உள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாஃப் உடன் இணைந்து செயலாற்றுவது குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

இதே போல கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. ஜியோபோன் நெக்ஸ்ட் எனப்படும் மிகவும் மலிவான ஸ்மார்ட் போன் வரும் அக்டோபர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ஒரு முழுமையான பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆகும், இது கூகுள் மற்றும் ஜியோ இரண்டிலிருந்தும் பயன்பாடுகளின் முழு தொகுப்பையும் பயன்படுத்த முடியும். அத்துடன் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மூலம் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முழு பயனையும் உபயோகிக்க முடியும். உலகளவில் மிகவும் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும் என்பது எனது வாக்குறுதியாகும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.