தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கத் தடை விதியுங்கள்: எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

புதுச்சேரியைப்போல தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கத் தடை விதியுங்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருப்பதாவது, தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்குக் கட்டணக் குழு ( Fee Committee) 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் (Tuition Fee)75% கட்டணத்தை மட்டும் இரு தவணைகளில் (45% , 30%) வசூலித்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்ததை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.

உயர்நீதிமன்றத்தின் அதே வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டணக் குழு சுற்றறிக்கை ஒன்றை (No 09/DSE/FC/2021 Dt 23.06.2021) அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் 75% கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்று அதில் கூறியிருப்பதோடு பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும்வரை தனியார் பள்ளிகளில் ஆண்டு நிதி, பேருந்து கட்டணம், சீருடை கட்டணம், நூலக-ஆய்வகக் கட்டணங்கள், விளையாட்டு, நுண்கலை கட்டணங்கள், மருத்துவ கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் பேரிடர் காலம் என்பதையும் கருதாமல் கல்விக் கட்டணம் மட்டுமின்றி பிற கட்டணங்களும் பெற்றோரிடம் வசூலிக்கப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் இதர கட்டணங்களை வசூலிப்பது மாபெரும் அநீதியாகும்.

கொரோனா பெருந்தொற்றால் வருவாயின்றி வாடும் பெற்றோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அனுப்பியிருப்பதைப்போல தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் இதர கட்டணம் எதையும் வசூலிக்கக்கூடாது என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுக் கூடுதல் கட்டண வசூலைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.