இலங்கையில் டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக மாறும் ஆபத்து! அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை.

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தொற்று நோய்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

உலகளவில் வேகமாகப் பரவி வரும் வைரஸ்களில் ஒன்றாக இந்திய வைரஸான டெல்டா வைரஸ் மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இலங்கையிலும் பரவுவதற்கு ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்தநிலையில், இது தொடர்பில் ஊடகங்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கருத்துத் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் பரவல் இலங்கைக்கு மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றல்ல. இது உலகளாவிய வைரஸ் பரவலாகும். ஆகவே, உலகின் ஏனைய நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாமும் எதிர்கொண்டு வருகின்றோம். சகல துறைகளிலும் நாம் பொருளாதார ரீதியில் நெருக்கப்பட்டுள்ளோம்.

முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்ற போதும் தற்போது வைரஸ் தன்மை மாறுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங் கொடுத்து வருகின்றோம்.

அத்துடன், மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 சத வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. எனினும், அரசு இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சுகாதாரத்துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்காக ஒரு நாளைக்கு 7 கோடி 20 இலட்சம் ரூபா பணம் செலவிடப்படுகின்றது. இதுவரை 15 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் வைரஸ் பரவல் மாறிக்கொண்டுள்ளது. இதில் தற்போது பரவிவரும் இந்தியாவின் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்காக அனைவரும் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.