பட்டையைக் கிளப்பும் இரட்டைச் சகோதரிகள்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் இரட்டைச் சகோதரிகள் அனைத்துப் பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜூலை 13) வெளியாகின. இத்தேர்வுகளில், 12,109 பள்ளிகள் கலந்துகொண்டன. 4,984 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஒட்டுமொத்தமாக 88.78% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் தேர்வுகளில் ஒரே மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர். அதாவது, மானசி மற்றும் மான்யா என்னும் சகோதரிகள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 95.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

ஆச்சரியப்படும் விதமாக இருவரும் அனைத்துப் பாடங்களிலும் ஒரே மாதிரியே மதிப்பெண்களையே பெற்றுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய மானசி சிங், ”இது நிச்சயம் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் நல்ல மதிப்பெண்களை எதிர்பார்த்தோம். ஆனால் ஒரே சமமான மதிப்பெண்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் 5 பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது கண்டிப்பாக தற்செயல் நிகழ்வுதான்” என்று தெரிவித்தார்.

Comments are closed.