டான் கல்வி சேவையை அங்குரார்ப்பனம் செய்து வைத்த நாமல் ….(படங்கள்)

டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை இரண்டு இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) யாப்பாணம்  வருகை தந்த போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஒரு தசாப்த காலமாக தரம் 6 முதல் உயர்தரம் வரை, கல்விச் சேவையினை வழங்கி வரும் டான் குழும கல்வித் தொலைக்காட்சி,

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக புதிய அலைவரிசையை இன்று ஆரம்பித்துள்ளது.
கல்வித் தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசையை, இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார்.

டான் தொலைக்காட்சிக் குழுமத்தின், கல்வித் தொலைக்காட்சியானது தற்போது நிலவும் இடர்காலத்தில் சீர்குலைந்துபோயுள்ள கல்விச் செயற்பாடுகளை மீளக் கட்டியெழுப்பும் வகையில், புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாலர் பிரிவு முதல் தரம் 5க்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக எமது ஆக்ஸ் கேபிள் விசன் ஊடாக உங்கள் இல்லத்திரைகளில் கல்வித் தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த 10 வருடங்களாக தரம் 6 முதல் 12 வரையான மாணவர்களுக்குக் கல்விச் சேவையினை வழங்கி வந்த எமது கல்வித் தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசைக்கு மேலதிகமாக, தரம் 1 முதல் தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி கற்கும் நோக்கில் இரண்டாவது அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பிரிவு மாணவர்கள், எமது கல்வித் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசையூடாக தடையற்ற கற்றல் நடவடிக்கையினை, பாடங்களின் நேர அட்டவணைக்கு ஏற்ப தெளிவான காட்சி அமைப்புக்கள் மூலம் கற்றுக்கொள்ளமுடியும்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் எமது குழுமத்தின் புதிய முயற்சியை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் இன்றைய நிகழ்வில், சமயத் தலைவர்கள், அமைச்சர் நாமல் ராஜபக்ச, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன், டான் தொலைக்காட்சிக் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி எஸ்.லலீசன் உட்பட கல்வியலாளர்கள், ஊடகத்துறைசார்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார நடைமுறைகளுடன் கல்வித் தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை அங்குராப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது கல்வித் தொலைக்காட்சியின் இரண்டாவது கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, இடர் காலத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு களம் கொடுக்கும் கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு நிகராக Dan தொலைக்காட்சி செயற்படுவதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இது சமகால அவசியத் தேவையாகும் எனவும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.