ஆன்லைன் விளையாட்டால் இருதரப்புக்கு இடையே மோதல்: வாலிபர் மண்டை உடைப்பு!

திருப்பூர் அருகே ஆன்லைன் விளையாட்டால் இரண்டு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வாலிபர் ஒருவரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜே. கே. ஜே.காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் சந்தோஷ். இவரது நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் பாஷா,மணிகண்டன், மோகன்,பாலாஜி, கதிரவன் ஆகியோர் அங்குள்ள ஒரு வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஆன்லைனில் ஃப்ரீ பையர் என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

தீவிரமாக விளையாடி வந்ததால் அந்த விளையாட்டில் யார் வெற்றி பெறுவது என்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் சந்தோஷை மற்ற நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். காலி மது பாட்டிலை எடுத்து சந்தோஷ் தலையின் மீது அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் சந்தோஷ் கண் அருகிலும் கடுமையான காயம் ஏற்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சந்தோஷின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள் அங்கு ஓடி வர அடிதடி ரகளையில் ஈடுபட்ட மற்ற வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அடிபட்ட சந்தோஷ் அவரது உறவினர்கள் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து சந்தோஷ் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் சந்தோசை தாக்கிவிட்டு தப்பியோடியவர்களில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் அருண் பாஷா உள்ளிட்ட 4 பேரை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வெளியில் சென்று விளையாட முடியாததால் ஆன்லைனின் விளையாடுவது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளாக மனநலம் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில், நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு மண்டை உடைப்பு வரை இட்டு சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இது போன்ற வன்முறையை தூண்டும் விளையாட்டுக்களை விளையாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.