சுற்றுலாக்கைத்தொழிலை மீள கட்டியெழுப்பல் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்ட சுற்றுலாக்கைத்தொழிலை மீள கட்டியெழுப்பல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளாவின் ஏற்பாட்டில் சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சியின் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு ஏதுவான பல வளங்களை கொண்டு காணப்படுகின்றது. இவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் வலுசேர்க்க முடியும். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான திட்டங்களடங்கிய முன்மொழிவு இதன்போது அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறையோடு தொடர்புடைய தொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இதன்போது செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

கொவிட் நிலை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை உயிர்ப்பிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலாத்துறைசார் தொழில் முயற்சியாளர்களது பிரச்சினைகளை தீர்த்து குறித்த துறையை மீள கட்டியெழுப்ப தேவையான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே. பரமேஸ்வரன்,திணைக்கள தலைவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.