மஹிந்த, கோட்டா, பசில் சந்திப்பு தோல்வி : பசில் பாராளுமன்றம் வருவதில் தடை ?

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை தொடர்பில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு பெற்றுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமைப்படுத்தல் சட்டத்தையும் மீறி இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பஸில் ராஜபக்ஷ அங்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் பசில் ராஜபக்ச பாராளுமன்றம் வர வேண்டும் என பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருவதால் இதற்கு முன்னர் நாட்டின் நிதி தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இருவரும் அதில் தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம் மக்கள் மத்தியில் உண்மையான ஒன்றாக காட்டப்படுவதாக மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ‘சார் பெயில்’ என்ற கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறு பக்கத்தில் நிதி அமைச்சை முழுமையாகக் கைவிட தற்போதைய நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனைத்து கருத்துக்களுக்கு மத்தியிலும் பஸில் ராஜபக்ஷ எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்ததால் இணக்கப்பாடுகள் எதுவும் சந்திப்பின்போது எட்டப்படவில்லை.

எனினும் இந்த மூவரது சந்திப்பிற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் பாரியாரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் இணங்குவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு இராஜினாமா செய்ய வேண்டிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசிங்க அல்லது கோடீஸ்வர வர்த்தகர் பலில் மர்ஜான் ஆகியோரின் பெயர்கள் முதலில் பரிந்துரை செய்யப்பட்ட போதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதுடன் இவர்கள் இருவரும் கட்சிக்காக உதவி செய்தவர்கள் என்பதால் நன்றி செலுத்தும் வகையில் வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ள போதும் பேராசிரியர் கல்வியாளர் என்பதாலும் கெட்டகொட மாத்தறை மாவட்டத்தில் கட்சியின் அமைப்பாளராக செயல்படுவதாகவும் அவர்களுடைய சேவை பாராளுமன்றில் அவசியம் என பசில் ராஜபக்ச கருதுகிறார்.

இறுதியில் கலாநிதி சரித்த ஹேரத் அவர்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்ட போதும் கோப் குழுவின் தலைவராக தான் செயல்படுவதால் இறுதிவரை இருந்து அந்த பணிகளை முன்னெடுக்க வேண்டி உள்ள நிலையில் தன்னால் ராஜினாமா செய்ய முடியாது என சரித்த ஹேரத் மறுத்துவிட்டார்.

இதனால் பசில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பதால் எதிர்வரும் நாட்களில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வாரா இல்லையா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.