கோட்டாவின் வீட்டில் ராஜபக்சக்கள் முக்கிய சந்திப்பு! – அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய பேச்சு.

ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, இராஜங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க ஆகிய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றுள்ளனர்.

பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை, அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் உட்பட அரசியல் ரீதியிலான குழப்பங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பஸில் ராஜபக்சவால்தான் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற ‘மொட்டு’ கட்சி உறுப்பினர்களின் வாதத்தால், கோட்டாபய பெயில் என்ற எதிரணியின் பிரசாரம் உண்மையாகின்றது என கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இந்த விடயம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பு நீண்டநேரம் இடம்பெற்றிருந்தாலும் காத்திரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கிடையில் தமது பாராளுமன்றப் பிரவேசம் தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுடன், பஸில் ராஜபக்ச தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளார் எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.