இடமிருந்து வலம் மாறும் சுவீடன்: சண் தவராஜா

உலகில் வாழ்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில் பெரும்பாலும் முதலிடங்களைப் பிடிப்பவை ஸ்கன்டிநேவிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் நோர்வே.

உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட இந்த நாடுகளில் காணப்படும் சட்டவாட்சி, குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், கல்வித் தரம், மக்களுக்கான அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்படல் போன்றவற்றுடன் மக்கள்நலன் சார்ந்த பல விடயங்களைக் கவனத்தில் கொண்டே குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

இந்த நாடுகளுள் ஒன்றான சுவீடன் நாடாளுமன்றில் கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, தலைமை அமைச்சராகப் பதவி வகித்த ஸ்ரெபான் லொவ்பன் பதவி துறந்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்து புதிய தேர்தல்கள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற இருந்த நிலையிலேயே, அரசுத் தலைவரின் பதவி துறப்பு சுவீடன் நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக நடைபெற்ற நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தும் மரபைக் கொண்டுள்ள சுவீடன் நாட்டில் எப்போதும் வலது மற்றும் இடது அணிகளே மாறிமாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தி வந்துள்ளன.

ஸ்ரெபான் லொவ்பன் தலைமையிலான அரசாங்கம் ‘இடது அணி’ அரசாங்கமாகக் கருதப்பட்டு வந்தது. 2014 இல் முதல் தடவையாக் லொவ்பன் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, அவர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சியும், பசுமைக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. இந்தக் கூட்டணிக்கு 43 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. இவர்கள் ஆட்சியமைப்பதற்கு இடதுசாரிக் கட்சியும், லிபரல் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு வழங்கின.

2018 இல் மீண்டும் இந்தக் கூட்டணியே தேர்தலில் வெற்றிபெற்றாலும் அந்தக் கூட்டணியின் வாக்கு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் இடது கூட்டணிக்கு 40.6 வீத வாக்குகளும், வலதுசாரிக் கூட்டணிக்கு 40.6 வீத வாக்குகளும் கிடைத்தன. தேர்தல் முடிவில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரெபான் லொவ்பன் அவர்களுக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டது.

ஸ்ரெபான் லொவ்பன் தலைமையிலான அணி ‘இடது அணி’ எனக் கருதப்பட்டாலும் நடைமுறையில் அது வலதுசாரி அணியாகவே நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் அல்லது அதற்குத் துணைபோகும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவந்த இந்த அரசாங்கம் அண்மையில் அறிமுகம் செய்த ஒரு சட்டமூலத்தின் விளைவாகவே ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது. ஒரு கோடி மக்களைக் கொண்ட, மிகவும் அமைதியான சுவீடன் நாடு வெகுவேகமாக வளர்ச்சிகண்டு வருகின்றது.

மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அங்கே உள்ள வீடுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான வாடகைக்கு உச்சவரம்பு அமுலில் உள்ளது. இந்நிலையில், புதிதாக வீடுகளை நிர்மாணிக்கும் தனியார் நிறுவனங்கள் அமுலில் உள்ள வாடகை உச்சவரம்பை நீக்கும்படி நேரடியாகவும், தமது நலன் சார்ந்த கட்சிகள் ஊடாகவும் நிர்ப்பந்தித்து வருகின்றன.

இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து ஸ்ரெபான் லொவ்பன் அரசாங்கம் வாடகை உச்சவரம்பை நீக்க முன்வந்ததன் விளைவாக இடதுசாரிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ‘வலது அணி’ அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து வெற்றியும் கண்டுவிட்டது.

யூன் 21 ஆம் திகதி நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பில் 181 வாக்குகளைப் பெற்று பிரேரணை வெற்றிபெற்றது. 349 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகளே கிடைத்தன. 51 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

சபையின் நம்பிக்கையை இழந்த ஸ்ரெபான் லொவ்பன் சரியாக ஒரு வாரத்தில், யூன் 28 ஆம் திகதி தனது பதிவியைத் துறந்தார்.

இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஊல்ப் கிறிஸ்ரர்சன் அவர்களை ஆட்சி அமைக்குமாறு சபாநாயகர் அன்றியஸ் நோர்லன் அழைப்பு விடுத்தார். நான்கு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்காத நிலையில், புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சி செய்யுமாறு காபந்துப் பிரதமர் லொவ்பன் அவர்களிடம் சபாநாயகர் கோரிக்கை வைத்துள்ளார். லொவ்பனின் முயற்சி வெற்றியளிக்காதவிடத்து புதிய தேர்தல் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்பதே தற்போதைய நிலைப்பாடு.

ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை உடைய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமையுமிடத்து இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையே. ‘சமரசம் என்பது அடிப்படைக் கொள்கைகளில் அல்ல’ என்பதே கட்சிகளின் நிலைப்பாடு என்பதால் லொவ்பன் அவர்களின் முயற்சி வெற்றியளிப்பது கேள்விக்குரியதே என்பதே நோக்கர்களின் கருத்தாக உள்ளது. எனினும், ஒரு வருட இடைவெளியில் முறையான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடைக்காலத் தேர்தலைத் தவிர்ப்பது என்ற கொள்கையில் தற்காலிக உடன்பாடு காணவும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது.

சுவீடன் நாடு வாழ்வதற்குத் தகுதியான சிறந்த நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும் கூட, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி சடுதியாக அதிகரித்து வருவதாக அண்மைக் காலப் புள்ளிவிபரங்கள் கோடிகாட்டி நிற்கின்றன.

அது மாத்திரமன்றி, கொரோனாக் கொள்ளை நோயைக் கையாண்ட விதத்திலும் லொவ்பன் அரசாங்கம் மீது கண்டனங்கள் உள்ளன. உலகின் ஏனைய நாடுகளைப் போன்று உள்ளிருப்பு, ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ‘மந்தை நிர்ப்பீடனம்’ என்ற இலக்குடன் அரசாங்கம் நடந்து கொண்டதால் நாட்டு மக்களில் 10 வீதமானோர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாக நேர்ந்தது.

அது மாத்திரமன்றி, அறிவியலுக்கு முரணான இந்த நடவடிக்கைகள் காரணமாக 14,200 பேர் வரை இதுவரை மரணத்தையும் தழுவி உள்ளனர். இவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தொலைத்த அரசாங்கமாகவே லொவ்பன் அரசாங்கம் இருந்து வந்தது.

அது மாத்திரமன்றி வெளிநாட்டு அகதிகளைக் கையாளும் விடயத்திலும் அரசாங்கம் ஒரு திடமான கொள்கையுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. 2015 இல் ஐரோப்பாவை நோக்கி, குறிப்பாக சிரிய அகதிகள் படையெடுத்த வேளைகளில் சிறிய தாராளப் போக்கைக் காட்டிய அரசாங்கம் பின்னர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிக் கொண்டது. தற்போதைய நிலையில் ஆபிரிக்காவில் இருந்து புலம்பெயரும் அகதிகளைக் கட்டுப்படுத்த ஆபிரிக்க மண்ணிலேயே தற்காலிக அகதி முகாம்களை நிர்மாணிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

‘இடது சார்பு’ அரசாங்கம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்டு புதிய வரலாறு சுவீடனில் எழுதப்பட்டுள்ள இன்றைய சூழலில், அந்த நாட்டில் உருவாகிவரும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சி தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அகதிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைப் பின்பற்றும் சுவீடன் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து வெற்றிகண்ட இந்தக் கட்சியின் வாக்கு வங்கி 2018 ஆண்டுத் தேர்தலில் இரட்டிப்பாக அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அகதிகளுக்கு எதிரான மனநிலை, அதிகரித்துவரும் குற்றச் செயல்கள், மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி போன்றவை இத்தகைய கட்சிகளின் செல்வாக்கில் அதிகரிப்பு ஏற்படுவதற்குச் சிறந்த களச்சூழலை வழங்குகின்றன.

இத்தகைய நிலை நீடிக்குமானால்; வாழ்வதற்குத் தகுதியான சிறந்த நாடுகளின்
பட்டியலில் இருந்து சுவீடன் விடுபடும் நாள் வெகுவிரைவிலேயே உருவாகும் என நம்பலாம். அதற்கான முதல் அறிகுறியே லொவ்பன் அரசின் கவிழ்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.