தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றியே வருகிறார்கள் : வேலாயுதம் கணேஷ்வரன்

ஐக்கிய தேசிய கட்சியின் ரவி கருணாநாயக்க “சஜித் பிரேமதாசவுடன் இனவாதிகள் இருப்பதாகவும் தங்கள் கட்சியில் சிறுபான்மையினர் எவரும் இல்லை” என அண்மையில் தெரிவித்திருந்தார். அதை அவர் பெருமையாக சொல்லிக் கொள்கிறார். ஐதேக பெரும்பான்மை கட்சி என அவர் இப்போது சொல்லிக் கொள்ள முனைகிறார் என கிளிநொச்சியில் நடந்த மக்கள் சந்திப்பொன்றின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஷ்வரன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது ,
நல்லாட்சி அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கரை வருடங்களாக ரணில் – மைத்ரியின் நல்லாட்சிக்கு ஆதரவான மிகப் பெரும் பக்க பலமாக இருந்தார்கள். அந்நேரத்தில் தேசியப் பிரச்சனையை தீர்த்திருக்கலாம். தேசிய பிரச்சனையை நல்லாட்சி தொடங்கிய 6 மாதத்துக்குள் செய்திருக்கலாம். அரசியல் யாப்பு என பேசி பேசியே காலத்தை வீணடித்தார்கள்.

இப்போது ரணில் விரும்பினார் , மைத்ரிதான் தடையாக இருந்தார் எனச் சொல்கிறார்கள். இவர்கள் அதை அப்போதைய அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள்ளேயே செய்திருக்கலாம். அதற்கான சாத்தியம் அப்போது நன்றாகவே இருந்தது. எதிர்க் கட்சி மிகவும் பின்னடைந்து போயிருந்தது. அதைச் செய்யாமல் இழுத்தடித்ததற்கு காரணம் புண்ணிருந்தால்தான் பிச்சை எடுக்கலாம் என்பதுதான்.

அதேபோல எங்களுடை எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தேசிய பிரச்சனையை தீர்க்கவோ மக்களை மேன்மையடைய வைக்கவோ வேண்டிய தேவை இல்லை. எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டு மக்களை பலவீனமாக்கி அவர்கள் மட்டும் சுகபோகமாக வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்களின் வாக்குகளை பெற்று அவர்கள் மேன்மையடைகிறார்களே தவிர மக்கள்தான் மேன்மையடையவில்லை. அவர்கள் போடும் ஒரு வீதி சரியாகப் போடப்பட்டுள்ளதா எனக் கூட சென்று பார்ப்பதில்லை. அதற்கு கூட அவர்களுக்கு நேரமில்லை. அவர்களால் மக்களுக்கு எந்த பிரயோசமும் இல்லை. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாமின்றி பின் தங்கிப் போயுள்ளார்கள். கல்வி முதல் வேலை வாய்ப்பு மற்று வீட்டு வசதி வரை தமிழ் மக்கள் பின் தங்கியுள்ளார்கள். இவை அத்தனைக்கும் காரணம் இதுவரை நம் மக்களின் வாக்குகளில் வந்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்தான். தேர்தல் நேரத்தில் வீடு தேடி வரும் இவர்கள் அதன்பின் அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வருவதே இல்லை. அடுத்த தேர்தலுக்குத்தான் அவர்களை தொகுதிகளில் காண முடிகிறது. அதை மக்களும் உணர்வதில்லை. அவர்களும் கண்டு கொள்வதில்லை. அதுதான் கவலைதரும் விடயமாக இருக்கிறது என கிளிநொச்சியில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஷ்வரன் தெரிவித்தார்.

Comments are closed.