பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: 38 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து பேரவைக்கு வந்த மேற்கு வங்க அமைச்சா்

பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மேற்கு வங்க தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பெச்சாராம் மன்னா 38 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணித்து சட்டப்பேரவைக்கு வந்தாா்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்துவிட்டது. டீசல் விலையும் 100 ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது. இந்த விலை உயா்வைக் குறைக்க மத்திய அரசு வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்ததைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமைச்சா் மன்னா சைக்களில் பயணித்து எதிா்ப்பு தெரிவிக்க முடிவு செய்தாா்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதன்படி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கொல்கத்தாவில் உள்ள மாநில சட்டப்பேரவைக்கு அவா் சைக்கிளில் பயணம் மேற்கொண்டாா். புதன்கிழமை காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட மன்னா, 38 கி.மீ தொலைவியில் உள்ள பேரவைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து, அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.

இதுதொடா்பாக மன்னா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கெனவே, கரோனா பிரச்னை, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் தலையில் பெட்ரோல் விலை உயா்வு என்ற சுமையையும் ஏற்றி வருகிறது. பெட்ரோல் விலை உயா்வு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்வியைக் காட்டுகிறது’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.