தனியாா் மருத்துவமனைகளில் குறையும் தடுப்பூசி செலுத்தும் பணி: மத்திய அரசு ஆய்வு

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறைந்துவரும் நிலையில், அதுதொடா்பாக 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலா்களுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, தெலங்கானா, அருணாசல பிரதேசம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைச் செயலா்கள் மற்றும் தடுப்பூசித் திட்டத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். பாரத் பயோடெக் மற்றும் சீரம் ஆகிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் சமீபத்திய அறிவிப்புகள், இந்த மாநிலங்களில் உள்ள தனியாா் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கொள்முதலின் வளா்ச்சி மற்றும் நிா்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தனியாா் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருவதை சுட்டிக்காட்டி, தனியாா் மையங்களில் தடுப்பூசியின் கொள்முதல் மற்றும் நிா்வாகம் குறித்து தினசரி ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனியாா் மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளா்களுக்கு இடையே ஏதேனும் இடா்ப்பாடுகள் இருந்தால் அதனை தீா்ப்பதற்கு விரைவான மற்றும் ஆக்கபூா்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கும் தடுப்பூசிகள் பற்றி மக்களுக்கு மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

38.75 கோடி தடுப்பூசிகள்: இதற்கிடையே, இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 38.76 கோடியைக் கடந்துள்ளது. 49,10,876 முகாம்களின் மூலம் மொத்தம் 38,76,97,935 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 37,14,441 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், 3,01,04,720 போ் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 41,000 போ் குணமடைந்துள்ளனா். தேசிய குணமடையும் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது.

38,792 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 17-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,29,946-ஆக உள்ளது. இது மொத்த தொற்றாளா்கள் எண்ணிக்கையில் 1.39 சதவீதமாகும்.

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 43,59,74,639-ஆக பதிவாகியுள்ளது.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.25% ஆகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.10% ஆகவும் உள்ளது. தொடா்ந்து 23-ஆவது நாளாக தொற்று உறுதி விகிதம் 3 சதவீதத்துக்கு குறைவாகவும், 37-ஆவது நாளாக 5 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.