பருத்தித்துறையில் தேர்த் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்குத் தடை

பருத்தித்துறையில் தேர்த் திருவிழாவில்
பங்கேற்ற கொரோனாத் தொற்றாளர்கள்

இன்று தீர்த்தத் திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை சிவன் கோயில் தேர்த் திருவிழாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் பங்கேற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க சுகாதாரப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஆரம்பத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் ஆலயத் திருவிழாக்களை 150 பேருடன் நடத்தலாம் என்று திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளிவந்ததை அடுத்து தேர்த்திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், பருத்தித்துறை 1 ஆம், 2 ஆம், 3 ஆம் குறுக்குத்தெருவில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருந்தன. இதன்போது குறித்த பகுதிகளில் 19 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிலர் பருத்தித்துறை சிவன் கோயில் தேர்த்திருவிழாவில் பங்கேற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்தே, சிவன் கோயில் தீர்த்தத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினாரால் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்த அறிவுறுத்தல் நேற்றிரவு 10 மணியளவில் ஆலய நிர்வாகத்துக்கு சுகாதரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று தீர்த்தத் திருவிழாவானது ஆலய பூசகர்கள், நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் ஆலயத்துக்குள்ளே நடத்துவதற்குச் சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பங்கேற்ற தேர்த்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.