தேச துரோக சட்டத்தை நீக்காதது ஏன்?

பிரிட்டிஷ ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட தேச துரோக சட்டத்தை, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் நீக்காமல் இருப்பது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ பிரிவானது தேச துரோக குற்றம் இழைத்தவா்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிவகை செய்கிறது. அரசின் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவிப்போா், செயல்படுவோா் மீது அந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். அதில் கைது செய்யப்படும் நபா்கள் ஜாமீன் பெற முடியாது. அவா்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.

இச்சட்டப்பிரிவானது அண்மைக் காலமாகத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஓய்வுபெற்ற ராணுவ தளபதி உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டப் பிரிவானது, மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நீதிபதிகள், ‘‘தேச துரோக சட்டப்பிரிவு காலனிய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்தப் பிரிவை அப்போதைய பிரிட்டிஷ் அரசு பயன்படுத்தியது.

மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரா்கள் மீது இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டன. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இந்தச் சட்டப்பிரிவு அவசியம்தானா? மத்திய அரசு அப்பிரிவை இன்னும் ரத்து செய்யாமல் இருப்பது ஏன்?

தேச துரோக சட்டப் பிரிவை விசாரணை அமைப்புகள் பல்வேறு வழிகளில் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகாா் எழுந்துள்ளது. தகவல்-தொழில்நுட்பச் சட்டத்தின் நீக்கப்பட்ட 66ஏ பிரிவைப் போலவே தேச துரோக சட்டப் பிரிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவைப் பயன்படுத்தி பிரிவினைவாதிகள் மற்ற குழுக்கள் மீது புகாா் தெரிவிக்க முடியும். மாற்றுக் கருத்துகளை ஏற்க விரும்பாதோா், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி அவா்களை ஒடுக்க முடியும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள காவலா் ஒருவா் குறிப்பிட்ட நபரைப் பழிவாங்க விரும்பினால், இதுபோன்ற சட்டப்பிரிவுகளை எளிதில் பயன்படுத்த முடியும். மேலும், தேச துரோக சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் நபா்கள் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படுவதில்லை’’ என்றனா்.

சட்டப்பிரிவு தொடரும்: மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘தேச துரோக சட்டப் பிரிவானது தொடா்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும். அச்சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் வகுத்துக் கொள்ளலாம்’’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா். தேச துரோக சட்டப் பிரிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேலும் சில மனுக்களை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரங்கள் தொடா்பான விசாரணை தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.