கொட்டித்தீர்த்த கனமழை… வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 24 பேர் மரணம்

மராட்டிய மாநிலம் மும்பையில் கனமழையைத் தொடர்ந்து செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி 24 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கனமழை காரணமாக மும்பையில் 3 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் இதுவரை 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரத்நகர் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது மரம் சாய்ந்து சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் இடித்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இருப்பினும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மும்பை மாநகரில் சியான், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை, வாட்லா பாலம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தொலை தூர ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.