மக்களால் சுகாதார வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா? – ஆராய விசேட குழு நியமனம்

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழி முறைமைகள் மற்றும் வழிகாட்டல்கள் கீழ்மட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படாதது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

கொரோனாத் தொற்றின் தற்போதைய நிலைமை தொடர்பாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலணி நேற்றுக் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்கள் பரிந்துரைகள், ஆலோசனைகள் என்பவற்றை மக்கள் பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து கண்காணிப்பதற்காக பிரிவொன்றை உருவாக்க இதன்போது முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து, மருந்தகம், வர்த்தக சந்தைகள், வைத்தியசாலை, தொழில் புரியும் இடங்கள் என்பவற்றில் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆராய்ந்து அவற்றைப் பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள பல்வேறு பிரிவுகளினூடாக மக்களை அறிவூட்டவும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

தொற்றாளர்களைத் தேடிச் சென்று பரிசோதனை நடத்தும் செயன்முறைகளை மேலும் பலப்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்பரவரி 18ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரையான 5 மாத காலத்தினுள் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 527 பி.சி.ஆர்.பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. பொரளை ஆய்வு நிலையத்தினூடாகவே கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில் கொரோனாவைத் தடுக்கும் செயலணியில் அங்கம் வகிக்கும் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உட்பட அதில் அங்கம் வகிக்கும் 35 பேரும் கலந்துகொண்டனர்.

Comments are closed.